அசாமின் மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் சேதம்

வடக்கு லக்கிம்பூர்: அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல் போட்டி காரணமாக, மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தியதை இதுவரை கண்டதில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில், நடை பயணமாகவும், பேருந்திலும் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14ம் தேதி யாத்திரையை தொடங்கிய அவர், தற்போது அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அசாம் மாநிலத்தின் வடக்கு லக்கிம்பூர் நகரில் யாத்திரையை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் போஸ்டர்களை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று லக்கிம்பூர் நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தி தலைமையில் தலைவர்கள் யாத்திரை செல்ல உள்ள நிலையில் வரவேற்பு பேனர்கள் சேதப்படுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாத்திரையின் வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாத விஷமிகள், பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்துள்ளதாக கட்சியின் மாநில தலைவர் பாரத் நாரா தெரிவித்துள்ளார்.
அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல் போட்டி காரணமாக, மற்ற கட்சிகளின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சேதப்படுத்தியதை இதுவரை கண்டதில்லை. பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு, இந்த யாத்திரையில் மக்களை பங்கேற்கவிடாமல் தடுப்பது உள்ளிட்ட பல இடையூறுகளை செய்கிறது. எப்படி இருந்தாலும் யாத்திரையின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.