முகமது ஷமிக்குப் பதிலாக முக்கிய பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ..!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அவேஷ் கானை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சேர்த்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ஜனவரி 2024 முதல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்படவில்லை என்பதால் கேப்டவுனில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். உள்நாட்டு கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்திற்காக விளையாடி வரும் அவேஷ், தற்போது பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.
சமீபத்தில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவேஷ் கான் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
🚨 NEWS 🚨
Avesh Khan added to India’s squad for 2nd Test.
Details 🔽 #TeamIndia | #SAvINDhttps://t.co/EsNGJAo8Vl
— BCCI (@BCCI) December 29, 2023
2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.