‘விருதுகளுக்கு தயாராக இருங்க’ – பவதாரிணி இசையமைத்த படத்தை பாராட்டிய கலைஞர் கருணாநிதி!
பவதாரிணி இசையமைத்த படங்களில் இலக்கணம் திரைப்படம் பல வகைகளில் முக்கியமானது. பொதுவுடமை, தனித்தமிழ், பகுத்தறிவு போன்ற முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட சந்திரசெயன் இதனை எழுதி, இயக்கியிருந்தார்.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் தமிழரசன். முற்போக்குச் சிநத்னைகள் கொண்டவன். அவன் சென்னை வந்து வைகறை என்ற பத்திரிகையில் பணிக்குச் சேர்கிறான். சமரசமற்ற அவனது கொள்கை நிலைப்பாடு காரணமாக ஊழல் அரசியல்வாதி மாணிக்கத்தின் பகையை சம்பாதிக்கிறான். இன்னொருபுறம் அவனது தாய்மாமன் அவனுக்கு பெண் பார்க்கிறார். கயல்விழி என்ற பெண்ணை இருதரப்பினருக்கும் பிடித்துப் போகிறது.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதற்காக தமிழரசன் கைது செய்யப்படுகிறான். அவனை காணவரும் கயல்விழி, இந்த சம்பவத்தை நேரில் பார்த்து, அவன் மீது வெறுப்பு கொள்கிறாள். ஆனால், அந்த சம்பவம் மாணிக்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழரசனுக்கு களங்கம் ஏற்படுத்த நடத்தப்பட்ட நாடகம் காவல்நிலையத்திலேயே அம்பலமாகிறது. மன்னிப்பு கேட்டு, தமிழரசனை அப்போதே விடுதலை செய்கிறார்கள்.
இது எதுவும் தெரியாத கயல்விழிக்கு அவளது எதிர்ப்பை மீறி தமிழரசனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். முதலிரவில் கமலய்விழிக்கு தன்மீதான கோபத்தையும், அதற்கான காரணத்தையும் தமிழரசன் அவளிடமிருந்தே தெரிந்து கொள்கிறான். அவன் கொடுக்கும் விளக்கத்தை நம்ப அவள் தயாராக இல்லை. தமிழரசனின் சூழலை புரிந்து கொண்ட நண்பர்கள் கயல்விழியிடம் நடந்தவற்றை எடுத்துரைக்க, அவளுக்கு உண்மை புரிகிறது. தம்பதிகள் இணைகிறார்கள். ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
வாழ்க்கை நன்றாகச் சென்று கொண்டிருக்கையில் ஒரு பிரபல அரசியல்வாதி மரணமடைகிறார். அதனைத் தொடர்ந்து பெரிய கலவரம் நடக்கிறது. அதில் தமிழரசனும், குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. கலவரக்காரர்களில் ஒருவன் எறியும் கல் கயல்விழியின் தலையைத் தாக்கி, அவளை கோமாவுக்கு இட்டுச் செல்கிறது. மூளைச்சாவு அடைந்த மனைவியின் உறுப்புக்களை தமிழரசன் தானமாகத்தர முன் வருகிறான். அவளது இதயம் இன்னொரு பெண்ணிற்கு பொருத்தப்பட உள்ள நிலையில், அந்தப் பெண்ணின் கணவன் கயல்விழியின் தலையில் கல்லெறிந்த கலவரக்காரன் என்பது தெரிய வருகிறது. உறவினர்கள் அவனை தாக்க, தமிழரசன் அவனை என்ன செய்தான், கயல்விழியின் இதயம் அவனது மனைவிக்கு பொருத்தப்பட்டதா என்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.
தமிழரசன், கயல்விழி தம்பதியின் மகள் கலெக்டராக பொறுப்பு ஏற்கும் நிலையில், வயதான தமிழரசன் பார்வையில் இந்தக் கதை பிளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது. சமூகத்தின் மீதான அக்கறை, சகமனிதர் மீதான அன்பு, குறைவான பொருளில் நிறைவாழ்க்கை, சமத்துவம், சகோதரத்துவம் என படத்தின் கதை, காட்சிகள் அனைத்தும் நேர்மறையாக அமைக்கப்பட்டிருந்தன. படத்தில் எங்கும் பிறமொழி கலப்பில்லாத தூய தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருந்தது இன்னொரு சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திரையில் தோன்றி படத்தின் நேர்மறை அம்சங்கள் குறித்து பேசும் காட்சியும் உண்டு.
படத்தில் நாயகனின் தாய்மாமாவாக மறைந்த காடுவெட்டி குரு நடித்திருந்தார். வைகறை பத்திரிகையின் ஆசிரியராக, பேராசிரியர் சுப.வீரபாண்டியனும், உதவி ஆசிரியராக மறைந்த தென்கச்சி சுவாமிநாதனும் நடித்திருந்தனர். படத்தில் தமிழரசன் – கயல்விழி தம்பதியின் திருமணம் புரோகிதர் இன்றி முற்போக்குத் திருமணமாக நடக்கும். அந்தத் திருமணத்தை பழ.நெடுமாறன் தலைமையேற்று நடத்தி வைப்பார். ஒரு படத்தில் இத்தனை தமிழ்சார்ந்த அரசியல்வாதிகள், ஆளுமைகள் இடம்பெற்றது இந்தப் படத்தில்தான்.
இலக்கணம் படத்தின் சிறப்புகளில் ஒன்று பவதாரிணியின் இசையும், பாடல்களும். காட்சிகளுக்கு இயைந்த உறுத்தாத இசையை தந்திருந்தார். பொதுவாக பாரதிதாசன் பாடல்களை அரிதாகவே படத்தில் பயன்படுத்துவார்கள். இலக்கணத்தில் டைட்டில் பாடலே பாரதிதாசன் பாடல்தான்.
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்..
– என்ற பாரதிதாசனின் பாடலுக்கு உயிர்ப்போடு இசையமைத்திருந்தார் பவதாரிணி. அதேபோல், காதல் பாடலுக்கு பாரதியாரின் பாடலை பயன்படுத்தியிருந்தனர்.
திருவே நின்னை
காதல் கொண்டேனே
நினது திருவுருவம்
மறவாதிருந்தேனே
பல திசையில் தேடி
திரிந்திளைத்தேனே
நினக்கு மனம் வாடி
தினம் களைத்தேனே
அடி நினது பருவம்
பொறுத்திருந்தேனே
மிகவும் நம்பி கர்வம்
படைத்திருந்தேனே
திருவே நின்னை
காதல் கொண்டேனே
நினது திருவுருவம்
மறவாதிருந்தேனே
பல திசையில் தேடி
திரிந்திளைத்தேனே
நினக்கு மனம் வாடி
தினம் களைத்தேனே
இடை நடுவில் பைய
சதிகள் செய்தாயே
அதனிலும் என் மையல்
வளர்தல் கண்டாயே
இடை நடுவில் பைய
சதிகள் செய்தாயே
அதனிலும் என் மையல்
வளர்தல் கண்டாயே
அமுதமழை பெய்ய
கடைக்கனல் காயே
நினதருளில் உய்ய
கருணை செய்வாயே…
– சிக்கலான சந்தம் கொண்ட இந்தப் பாடலுக்கு மிகச்சிறப்பாக மெட்டமைத்து இசையமைத்திருந்தார் பவதாரிணி. பாரதி படத்தில் வரும், நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே… பாடல் போன்று புகழும், பாராட்டும் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது. இவை தவிர பிறைசூடன், பா.விஜய் எழுதிய பாடல்களும் படத்தில் இடம்பெற்றிருந்தன.
படத்தில் வரும் நாயகனின் வீடு, பத்திரிகை அலுவலகம் எங்கிலும் புத்தர், திருவள்ளுவர், பெரியார், திருவள்ளுவர், அம்பேத்கர் படங்களும், அவர்களது கருத்துகளும் இடம்பெற்றிருந்தது படத்தின் கதைக்கும், காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் பொருத்தமான பின்னணியாக அமைந்திருந்தது. டைட்டில் பாடலில் பெரியார், நேதாஜி, அன்னை தெரசா என பல்வேறு ஆளுமைகளின் வீடியோவையும் இயக்குநர் இடம்பெறச் செய்திருந்தார். தமிழகத்தில் சில தலைவர்கள் இயற்கை எய்தியபோதும், சில தலைவர்கள் கைது செய்யப்பட்ட போதும், தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் பொதுச்சொத்தை சூறையாடி, பொதுமக்களை தாக்கி, பலரை தீக்கிரையாக்கிய சம்பவத்தை படத்தின் கிளைமாக்ஸில் இயக்குநர் பயன்படுத்திக் கொண்டது சிறப்பு. இன்னும் அந்த அரசியலை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.
தமிழரசனாக விஷ்ணுப்ரியன் நடித்திருந்தார். அடூர் கோபாலகிருஷ்ணனின் நிழல்குத்து திரைப்படத்தில் அறிமுகமான இவரது முதல் தமிழ்ப் படம் இது. ராம் என்று இவரது பெயர் டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழரசனாக இவரது நடிப்பும், கயல்விழியாக உமாவின் நடிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருந்தன. வினு சக்ரவர்த்தி, காதல் சுகுமார், சபீதா ஆனந்த், பாலா சிங், சிட்டிபாபு, ரோகினி, ராஜஸ்ரீ உள்பட பலரும் நடித்திருந்தனர்.
படத்தை வெளியிடும் முன்பு, அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதிக்கு திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. அவருக்குப் பிடித்தமான மொழி, இன அரசியலை படம் பேசியதால் படத்தை ரசித்துப் பார்த்ததோடு,. இயக்குநர், இசையமைப்பாளர் உள்பட படக்குழுவினரை பாராட்டினார். இந்த நிகழ்வின் போது உடனிருந்த படத்தின் நாயகன் விஷ்ணுப்ரியனை தொடர்பு கொண்டு அன்றை நிகழ்வு குறித்து கேட்டதற்கு, கலைஞர் படத்தை ரசித்துப் பார்த்ததாகவும், இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி, படத்தில் நடித்தவர்கள் என அனைவரையும் பாராட்டியதாகவும், விருதுகளுக்கு தயாராக இருங்கள் என்று மனம் திறந்து வாழ்த்தியதாகவும் கூறினார்.
ஒரு இசையமைப்பாளராக பவதாரிணியின் திறமையை அறிந்து கொள்ள இலக்கணம் திரைப்படம் சிறந்த தேர்வாக இருக்கும்.