வீட்டுக்கு கிளம்ப தயாரா இருங்க.. இந்திய அணி எடுத்த கறார் முடிவு.. கலக்கத்தில் புதிய வீரர்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகி மூன்று போட்டிகளில் ஆடிய ரஜத் படிதாரை அணியை விட்டு வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அவரது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக் குறியாகி இருக்கிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கே எல் ராகுல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றார் ரஜத் படிதார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில், ஆறு இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்த ரஜத் படிதார் அதிகபட்சமாக 32 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் இரண்டு முறை டக் அவுட் ஆனார். மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவித்த பிட்ச்களில் கூட அவர் ரன் சேர்க்க திணறினார். மேலும், அவர் அவுட்டான விதம் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதை அடுத்து அவரை ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பே அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது இந்திய அணி நிர்வாகம். ஆனால் கே எல் ராகுல் இன்னும் முக்கு உடற்தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாக மாற்று வீரராக ரஜத் படிதார் தற்காலிகமாக அணியில் நீடித்து வருகிறார். ஒருவேளை கே எல் ராகுல் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது உறுதியானால் ரஜத் படிதார் உடனடியாக நீக்கப்படுவார்.
அவரிடம் இந்திய அணி நிர்வாகம் முன்பே இது குறித்து தெரிவித்து விட்டதாகவும், அவர் இனி ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று தன் ஃபார்மை மீட்க வேண்டும் எனவும் அவரிடம் கூறப்பட்டு இருக்கிறது. இனி சில மாதங்கள் கழித்தே இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும். அதற்குள் விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி விடுவார்கள். எனவே, ரஜத் படிதாரின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது. தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.