வருடம் ரூ.20 கோடி சம்பாதிக்கும் பிச்சைக்காரர்கள்.. பிரபலமான இந்திரா பாய்..!
இந்தியாவில் பணக்கார பிச்சைக்காரர்கள் குறித்து நிறைய செய்திகள் வந்தாலும், இங்கு ஒரு குடும்பமே போதுமான பணம் இருந்தும் பிச்சை எடுத்து வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை வேண்டுமென்றே பிச்சை எடுக்க வைத்தது மூலம் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தூரை சேர்ந்த இந்திரா பாய் என்ற பெண், தனது குழந்தைகளை பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதற்காக அதிகாரிகளால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்திரா பாய் கைது செய்யப்பட்ட பின்பு அவரை விசாரிக்கையில் அவரிடம் ஒரு நிலம், இரண்டு மாடி வீடு, ஒரு மோட்டார் பைக், 20,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்திரா பாய் இதேபோன்ற குற்றங்கள் செய்த வரலாற்றைக் கொண்டவர், குழந்தைகளை குற்றம் செய்யவும், பிச்சை எடுக்கவும் ஈடுப்படுத்தப்பட்டது உறுதியான நிலையில் திங்கட்கிழமை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே நேரத்தில் அவரது மகள்களில் ஒருவர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனமான சன்ஸ்தா பிரவேஷ் அமைப்பின் உறுப்பினர்கள் இந்திரா பாயை சந்தித்து கேள்வி கேட்ட போது அவர் “பட்டினி கிடப்பதற்குப் பதிலாக, நாங்கள் பிச்சை எடுக்கிறோம். திருடுவதை விட இது சிறந்தது” என்று கூறியுள்ளார் இந்த பணக்கார பிச்சைகார பெண்.
தன்னார்வ தொண்டு நிறுவனம், இந்தூர் முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து, இந்தூரில் உள்ள 38 பெரிய பகுதிகளில் இருந்து சுமார் 7,000 பிச்சைக்காரர்கள், அவர்களில் பாதி பேர் குழந்தைகள் பற்றிய தரவுகளை சேகரித்து வருகிறது.
இந்த 7000 பிச்சைக்காரர்கள் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ரூபாலி ஜெயின் தெரிவித்தார்.
இந்திரா பாய்-க்கு 10, 8, 7, 3 மற்றும் 2 வயதில் மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த குழந்தைகளை இந்தூரில் உள்ள பரபரப்பான லவ் குஷ் பகுதியில் பிச்சை எடுக்க வைத்துள்ளார். இந்திராவின் பிச்சை எடுத்து பணம் சம்பாதிக்கும் தொழில் அவருடைய கைது மூலம் பிப்ரவரி 9 ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
இந்திரா பாய் காவல் துறையினர் பிடித்ததை தொடர்ந்து,
அவரது கணவர் மற்றும் இரண்டு மூத்த குழந்தைகள் தப்பியோடிவிட்டனர். கைத செய்யப்பட்ட இந்திராவிடம் இருந்து ரூ.19,600 மற்றும் அவரது மகளிடம் இருந்து ரூ.600ஐ அதிகாரிகள் கைப்பற்றினர். விசாரணையில் 45 நாட்களில் 2.5 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக இந்திரா தெரிவித்தார்.