பாரத் அரிசி விற்பனைக்கு வந்தது.. ஒரு கிலோ அரிசி விலை வெறும் 29 ரூபாய்..!!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்திய மத்திய அரசு, கடந்த ஒரு ஆண்டாக உணவு பொருட்கள் விலையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.
கடந்த ஓராண்டில் இந்தியாவில் தானியங்களின் ரீடைல் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் மக்களின் சுமையை போக்க மத்திய அரசு நிவாரணம் அளிக்கும் வகையில் மானிய விலையில் உணவு பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தது.
இதன்படி மத்திய அரசு 29 ரூபாய் என்ற மானிய விலையில் ‘பாரத் அரிசி’யை செவ்வாய்க்கிழமை அரசு விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் கிடைக்கும்.
இந்திய உணவுக் கழகம் (FCI) சுமார் 5 லட்சம் டன் அரிசியை, முதல் கட்டமாக இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகிய இரண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கும், இதை சில்லறை வணிக நிறுவனமான கேந்திரிய பந்தர் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே உணவு பணவீக்கத்தை குறைக்க பாரத் பிராண்டின் கீழ் கோதுமை மாவை பாரத் ஆட்டா பெயரில் ஒரு கிலோ 27.50 ரூபாய்க்கும், பாரத் கடலை பருப்பை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது. கோதுமை மாவு மற்றும் கடவை பருப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அரிசிக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 ஆம் ஆண்டு மத்திய அரசு ஏற்றுமதி குறைப்பு முதல் பல கட்டுப்பாடுகளை விதித்த போதும் விலை குறையாமல் இருந்தது. இதனால் மத்திய அரசு ரீடைல் விற்பனையாளர்கள் முதல் மொத்த விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், பெரிய ரீடைல் நிறுவனங்கள் வரையில் அவர்களுக்கு சரக்கு இருப்பு குறித்த தரவுகளை கேட்டுள்ளது. இதன் மூலம் உணவு பொருட்கள் பதுக்கப்படுகிறதா என்பதை கண்டுப்பிடிக்க உள்ளது.