ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..
அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பாரதிராஜா ஹீரோ கிடைக்காமல் தேடித் தேடி அலைந்தாராம். அப்போது அவருக்கு கிடைத்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். எப்படி கிடைத்தார்னு பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் சொல்ல கேட்போம்.
பாரதிராஜாவைப் பொருத்தவரை ஒருவரைப் பார்த்தாலே போதும். அவர் எந்த அளவு நடிப்பார் என்பது அவருக்குத் தெரிந்து விடும். நவரச நாயகன் என்றாலே கார்த்திக் தான். பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். பாரதிராஜாவின் 10வது படம் அலைகள் ஓய்வதில்லை.
பாரதிராஜா 16 வயதினிலே எடுத்த போது நான் பத்திரிகையாளனாக இருந்தேன். அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். அலைகள் ஓய்வதில்லை எடுத்த போது என்னை உதவி இயக்குனராக வருகிறாயா எனக் கேட்டார். அப்போது எனக்கு வருமானம் நல்லா வந்தபோதும், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.
பாரதிராஜாவின் 7வது படம் நிழல்கள். எல்லோரும் புதுமுகங்கள். அது தோல்வி அடைந்தது. நிழல்கள் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் மணிவண்ணன். அந்தப் படம் தோல்வி அடைந்த போதும் அவரது கதையையே அடுத்த படமான அலைகள் ஓய்வதில்லைக்கும் தேர்ந்தெடுத்தார்.
படத்தில் கதாநாயகியாக நடிக்க அம்பிகாவின் தங்கை ராதாவைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் கதாநாயகன் கிடைக்கவில்லை. படப்பிடிப்பு நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த சூழலில் தான் ராயப்பேட்டையில் பள்ளியில் படித்த மாணவனை தேர்ந்தெடுத்தார். என்னிடம் அந்த மாணவனைக் காட்டினார். எனக்கு அவன் ஹீரோவுக்கு சரியாக இருப்பான் என்று தோன்ற வில்லை. என்னுடைய கருத்தை சொன்னேன்.
இன்னும் எவ்வளவு நாள் தான் தேடுவது என்றார். இன்னும் ஒரு நாள் மட்டும் தேடுவோம். கிடைக்கவில்லைன்னா இந்தப் பையனையே அழைத்துச் செல்வோம் என்றேன். ஒவ்வொரு கல்லூரியாக தேட ஆரம்பித்தோம். எவ்வளவு தேடியும் கதாநாயகன் கிடைக்கவில்லை. அப்போது அட்லாண்டிக் ஓட்டலுக்கு காபி சாப்பிட சென்றார்களாம். அப்போது அவர்களுடன் குரு, டிக் டிக் டிக் படங்களைத் தயாரித்த ஆர்.சி.பிரகாஷ்சும் வந்திருந்தார்.
பாரதி ராஜா அப்போது தான் தனது காரை ஓட்ட ஆரம்பித்தாராம். அப்போது ஒரு மாணவன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா. அந்த மாணவனுக்கு ஆஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் கொடுத்தோம். அப்போது முத்துராமன் வீடு வழியாக கார் சென்றது. அங்கு அவரது மகன் முரளி பேட்மிட்டன் விளையாடிக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் காரைத் திருப்பிக் கொண்டு வரும்படி பாரதிராஜா சொன்னார். இப்போது பேட்மிட்டன் ஆடிக்கொண்டு இருந்த பையனையே பார்த்தார். அந்தப் பையன் யாருன்னு கேட்டார்.
அது முத்துராமனின் மகன் என்றேன். உடனே அந்தப் பையனை அழைத்துப் பேசுங்கள் என்றார். அவனிடம் நான் பேசிக் கொண்டு இருந்தேன். பாரதிராஜா அந்தப் பையனையே பார்த்துக் கொண்டு இருந்தார். முத்துராமன் எங்கே என்று கேட்டதற்கு படம் பார்க்க சென்றதாக அந்தப் பையன் கூறினான். அன்று இரவு முத்துராமனைப் போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்தார். உங்க பையன் தான் என்னோட அலைகள் ஓய்வதில்லை படத்துக்குக் கதாநாயகன் என்றார்.
முத்துராமன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன்பிறகு படப்பிடிப்புக்கு கிளம்பினோம். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது தான் அந்தப் பையனோட பேரு கார்த்திக்னு மாற்றப்பட்டது. அந்தப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் கார்த்திக்கே நடித்தார். படம் வெளியானதும் கார்த்திக், ராதா ஜோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
மேற்கண்ட தகவலை பிரபல சினிமா இயக்குனரும், யூடியூபருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.