Bhavatharini: “அப்பாவ கடைசியா பார்க்கணும்” பதற்றமாக சென்ற பவதாரிணி… பார்த்ததும் கலங்கிய இளையராஜா!
சென்னை: இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். கேன்சர் பாதிப்பால் இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார் பவதாரிணி.
அப்போது அப்பாவை பார்க்க வேண்டும் என பிடிவாதமாக இருந்த பவதாரிணி, அதுவே கடைசி சந்திப்பு என தெரியாமல் சென்றுள்ளார். அதன்பின்னரே பவதாரிணியின் உடல்நிலை மிக மோசமாகி அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
அப்பாவ கடைசியா பார்க்கணும்
பின்னணி பாடகியும் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி ஜன.25ம் தேதி மாலை உயிரிழந்தார். கேன்சர் பாதிப்புக்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், திடீரென பவதாரிணி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு, பின்னர் தேனியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பவதாரிணியின் இறுதி நிகழ்ச்சியில் இளையராஜா குடும்பத்தினருடன் பாரதிராஜா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இறுதியாக பவதாரிணிக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்த ‘மயில் போல ஒரு பொண்ணு’ பாடலை இளையராஜா குடும்பத்தினர் பாடிக்கொண்டே அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இளையராஜாவின் செல்ல குழந்தையாக வலம் வந்தவர் பவதாரிணி. அவரது மறைவால் இளையராஜா ரொம்பவே உடைந்துவிட்டார். இந்நிலையில் பவதாரிணிக்கு கேன்சர் பாதிப்பு இருந்ததே சில மாதங்களுக்கு முன்னர் தான் தெரியவந்ததாம்.
அப்போதும் கூட பவதாரிணிக்குக் கூட அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை இளையராஜா குடும்பத்தினர் சொல்லவில்லையாம். அவருக்குத் தெரியாமலேயே இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இளையராஜாவும் அங்கு தனது இசை கச்சேரிக்கு செல்வதால் பவதாரிணியின் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். பவதாரிணி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போது, இளையராஜா தனது இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாராம்.
ஆனால் திடீரென பவதாரினி ரொம்பவே எமோஷனலாக, உடனே அப்பாவை பார்க்க வேண்டும் என அடம் பிடித்துள்ளார். மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும் அதனை பொருட்படுத்தாத பவதாரிணி, காரில் இளையராஜாவை பார்க்கச் சென்றுள்ளார். பவதாரிணி திடீரென வந்ததை பார்த்து இளையராஜாவே ஒருகனம் பதறிவிட்டாராம். அதன்பின்னர் அவரை தேற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த இளையராஜா, அவரும் சிறிது நேரத்தில் அக்கு சென்றுள்ளார்.
ஆனால், அதற்குள்ளாக பவதாரிணிக்கு மூச்சுத் திணறல் அதிகமாக, சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டாராம். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே சென்றது தான் மூச்சுத் திணறலுக்கு காரணம் என சினிமா செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தனது வீட்டில் ஏதோ ஒரு துக்க நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை இளையராஜா சில வாரங்களுக்கு முன்னரே கணித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.