Bigg Boss 7 Tamil: தமிழ் பால் ஊட்டி வளர்த்த அப்பா.. டாக்டர்.. ஐ.ஏ.எஸ்.. கரைந்து போன கனவுகள்! – அதகள அர்ச்சனா உருவான கதை!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான விஜே அர்ச்சனா, மீடியா பயணத்தை தொடங்கியது எப்படி என்பதை பிரபல யூடியூபர் ஷா தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “அர்ச்சனாவை தெரிந்து கொள்வதற்கு முன்னால் முதலில் அவரது அப்பாவான ரவிச்சந்திரன் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். ரவிச்சந்திரன் ஒரு தமிழ் ஆசிரியர்.
சிறுவயதிலேயே அர்ச்சனா நன்றாக பாடுகிறாள் என்று தெரிந்த உடனேயே, இசைப்பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டு இருக்கிறார். தொடர்ந்து மேடை பேச்சுகளிலும் அர்ச்சனா நன்றாக பேசத்தொடங்கி இருக்கிறார்.
தான் ஒரு தமிழ் ஆசிரியராக இருந்த போதும் கூட, அவர் அர்ச்சனா பேசுவதற்கு தேவையான எல்லாவற்றையும் அப்படியே எழுதி கொடுத்து விட வில்லை. தலைப்பிற்கு ஏற்றார் போல, கவிதை புத்தகங்களை அர்ச்சனாவிற்கு ரவிச்சந்திரன் கொடுப்பார். அதிலிருந்து அர்ச்சனா தனக்குத் தேவையான தகவல்களை எடுப்பார். அதனை ரவிச்சந்திரன் சரிபார்த்து கொடுக்க, அர்ச்சனா அதனை மேடைகளில் பேசுவார்.
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த அர்ச்சனாவை டாக்டர் ஆக்க வேண்டும் என்று அப்பாவிற்கு ஆசை. ஆனால் 12ம் வகுப்பில் 1505 மதிப்பெண்கள் பெற்றதால், அந்த கனவு தகர்ந்தது. இதனையடுத்து அர்ச்சனாவை ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் ரவிச்சந்திரன்.
ஆனால் அர்ச்சனாவின் ஆசை வேறுவிதமாக இருந்தது. அவர் மீடியாவிற்குள் செல்ல ஆசைப்படுவதாக அப்பாவிடம் சொல்ல, நீ ஏன் மீடியாவிற்கு ஏன் செல்ல வேண்டும்… உனக்கு என்ன திறமை இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா நான் நன்றாக பாடுகிறேன். நன்றாக பேசுகிறேன் என்று சொல்ல, அவர் அதற்கு இங்கிலிஷ் லிட்ரேச்சர் படி என்று சொல்லி இருக்கிறார்.
அந்த முடிவில் மாறுபட்ட அர்ச்சனா இன்ஜினியரிங் படித்துக் கொண்டு, மீடியாவிற்கும் முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, இன்னொரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார் அர்ச்சனா. இதனிடையே ஆதித்யாவில் நடந்த ஒரு ஷோவில் வின்னர் ஆனார் அர்ச்சனா. இதனையடுத்து ஆதித்யா அந்த சேனலில் விஜேவாக சேர்ந்தார். அப்படித்தான் அவரின் மீடியா பயணம் தொடங்கியது.” என்றார்.