ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர்… திருவாரூர் ஆழி தேரோட்டம் மார்ச் 21ம் தேதி… குஷியான பக்தர்கள்!

தேரோட்டத்தைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சி. இந்நிலையில், உலகம் முழுக்கவே தேரோட்டத்தில் பிரபலமான திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேரின் தேரோட்டம் வரும் மார்ச் 21ம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வண்டி மாடு கட்டிக் கொண்டு, கட்டுச்சோற்றுடன் திருவாரூர் ஆழித்தோரோட்டத்தைக் காண பல ஊர்களில் இருந்தும் மக்கள் சாரை சாரையாக செல்வார்கள். அந்தெல்லாம் கடந்த தலைமுறையினரின் பாரம்பரிய, பண்டிகைத் திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்தது. கால மாற்றத்தில், செல்போன், இன்ஸ்டாகிராம் யுகத்தில்… தேர் தானே என்று இன்றைய இளைஞர்கள் அதைப் புறந்தள்ளினாலும், இன்றும் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்று திருவாரூர் ஆழித்தேர் அழைக்கப்படுகிறது. இந்த தேர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஓடத் தொடங்கியது என வரலாறுகள் தெரிவிக்கின்றது. இந்தத் தேரின் மொத்த உயரம் 96 அடியாகவும், அகலம் 67 அடியாகவும் உள்ளது.

இதன் மொத்த எடை 350 டன் ஆகும். இந்த தேரினை இழுப்பதற்கு ஒன்றரை டன் எடையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரமுடைய வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. தேர் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தேரை திருப்புவதற்கும் தேரினை நிறுத்துவதற்கும் புளிய மரத்தாலான 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தத் தேரின் முகப்பு பகுதியில் ரிக், யஜுர், சாம, அதர்வண என்கிற நான்கு வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு குதிரைகள் பாயும் நிலையில் அமைக்கப்பட்டு அழகாக காட்சி தரும். அவற்றின் நடுவில் யாழி ஒன்றும் அமைக்கப்படும். இந்த தேரைப் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அவர்களுக்கு உதவும் வகையில் பின்பக்கத்தில் புல்டோஸர் இயந்திரம் மூலம் தேர் தள்ளப்படும்.

இந்த மிகப் பெரிய தேர் ஆடி அசைந்து வரும் காட்சியைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் வருவார்கள். அன்றைய தினம் திருவாரூரில் கேட்கும் ‘ ஆரூரா தியாகேசா’ என்ற முழக்கம் விண்ணை எட்டும் அளவுக்கு இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *