பாஜகவுடன் மீண்டும் இணையும் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்? இந்தியா கூட்டணியில் இடைவெளி?

பிகாரில் மகா கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக கூட்டணியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் இணைய உள்ளதாக தகவல்கள் உலா வரும் நிலையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
பிகாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன. முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். 2022-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்தார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பொறுப்பேற்றார்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. இதற்காக மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கையை காங்கிரஸ் அரசு மறுத்துவந்ததாக குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
குடியரசு தினத்தையொட்டி, மாநில ஆளுநர் அளித்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் கலந்துகொண்ட நிலையில், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்ளவில்லை. தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்ளாதது குறித்து நிதிஷ்குமாரிடம் கேட்டபோது, அவரிடமே கேளுங்கள் என பதிலளித்தார். இந்த சூழலில் மகா கூட்டணியில் நிதிஷ்குமாருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏ கோபால் மண்டல் குற்றம்சாட்டியுள்ளார். அவர் எங்கு சென்றாலும், அவருடன் செல்வோம் எனவும் அவர் உறுதியளித்தார்
இந்நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச்சராக நிதிஷ் பதவியேற்கக்கூடும் என கூறப்படுகிறது. அதேநேரம், இந்தியா கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேற மாட்டார் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல, தனது நிலைப்பாட்டை நிதிஷ்குமார் தெளிவுபடுத்த வேண்டும் என ராஷ்ட்ரிய ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது.