சிஎன்ஜியில் ஓடும் பைக்குகள் இந்தியா வரபோகுது… உறுதி செய்த பஜாஜ்.. எப்போ? விலை எவ்வளவு இருக்கும்?
இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், சிஎன்ஜி ஆப்ஷன் நான்கு சக்கர வாகனங்கள் (Four Wheelers) மற்றும் ஆட்டோரிக்ஷா (Auto Rikshaw) ஆகியவற்றில் மட்டுமே கிடைத்துக் கொண்டிக்கின்றது. டூ-வீலரில் இதுவரை எந்த ஒரு நிறுவனமும் சிஎன்ஜி வசதியை அறிமுகம் செய்யவில்லை. இது இரண்டு சக்கர வாகன காதலர்களுக்கு பெருத்த வறுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருந்து வருகின்றது.
இந்த நிலையிலேயே பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று விரைவில் சிஎன்ஜியில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும், அது என்ன மாதிரியான விலையில் விற்பனைக்கு வரக் கூடும் என்பது பற்றிய விபரங்களையும் வெளியிட்டு இருக்கின்றது. அது என்ன நிறுவனம்? எப்போது அது சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவே (Bajaj Auto) விரைவில் இந்தியாவில் சிஎன்ஜியில் இயங்கும் டூ-வீலர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கிவிட்டது. அது வருகின்ற 2025 ஆம் நிதியாண்டில் தன்னுடைய முதல் சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
சிஎன்ஜி இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதை முன்னிட்டு பஜாஜ் நிறுவனம், அவற்றிற்கு வரி சலுகை வழங்க கோரிக்கை விடுத்திருக்கின்றது. 12 சதவீதம் வரை வரி சலுகையை அது அரசிடம் கோரியிருக்கின்றது. சிஎன்ஜி வாகனங்கள் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதிலும் பஜாஜ் அதிகம் கவனம் கொண்டிருக்கின்றது.
இதேபோல், அது தயாரிக்கும் மற்ற சிஎன்ஜி வாகனங்களை போலவே பைக்குகளும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் இயங்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான பிரத்யேக ஃப்யூவல் டேங்குகளையே பஜாஜின் சிஎன்ஜி வாகனங்கள் கொண்டிருக்கும். அதாவது, ஒற்றை ஃப்யூவல் டேங்கிலேயே பெட்ரோல் நிரப்புவதற்கு என தனி அறையும், சிஎன்ஜியை நிரப்புவதற்கு என தனி சிலிண்டரும் வழங்கப்பட இருக்கின்றது.
பஜாஜ் நிறுவனம் அதன் சிஎன்ஜி பைக்குகளை புதிய பிராண்டின் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் எக்சிகியூட்டிவ் டைரக்டர் ராகேஷ் ஷர்மாவும் உறுதி செய்திருக்கின்றார். இந்த பைக்கில் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிற்குமான வசதி இடம் பெற இருப்பதால் சற்று காஸ்ட்லியான வாகனமே சிஎன்ஜி பைக்குகள் இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், ஏழை மற்றும் எளிய மக்களாலும் சிஎன்ஜி வாகனங்களை வாங்கி பயன்டுத்திக் கொள்ளவும் இந்த நிலை உதவியாக இருக்கும். சிஎன்ஜி நிலையங்கள் பயன்பாட்டில் இருப்பதைப் பொருத்து சிஎன்ஜி பைக்குகளின் விற்பனையும் அமோகமாக இருக்கும். அருகில் சிஎன்ஜி நிலையங்கள் இல்லாத பகுதி மக்கள் கட்டாயம் சிஎன்ஜி பைக்குகளை தவிர்க்கவே செய்வார்கள்.
ஆகையால், சிஎன்ஜி மையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் பஜாஜ் முன் வைத்திருக்கின்றது. அதேவேளையில், கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது நாட்டில் அதிக எண்ணிக்கையில் சிஎன்ஜி மையங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், பஜாஜ் நிறுவனம் சிஎன்ஜியால் இயங்கும் பைக்குகளை மட்டுமல்ல அது ஃப்ளெக்ஸி ஃப்யூவல் வாகனங்களை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த வாகனங்களை நிறுவனம் இன்று தொடங்கியிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ காட்சிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.