பில்கிஸ் பானு வழக்கு: சிறையில் சரணடைய 11 பேரில் 9 பேர் தலைமறைவு.?
பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரணடைய உச்ச நீதிமன்றம் தீர்ப்புயளித்துள்ள நிலையில், 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையில் 11 குற்றவாளிகளும் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி குஜராத் அரசு பரிந்துரையின் பேரில் நன்னடத்தை மற்றும் தண்டனை குறைப்பு விதிப்படி முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்ய குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, சிறை அதிகாரிகளிடம் சரணடைய இரண்டு வார கால அவகாசம் அளித்த நிலையில், 11 குற்றவாளிகளில் 9 பேர் “காணாமல் போயுள்ளனர்” என்று தகவல் வெளியாகியுள்ளது.