நகை விற்பனை தொழிலில் களமிறங்கும் பிர்லா குழுமம்!
பொதுவாக யாரவது பணம் இருப்பது போல் சீன் போட்டால், நீ என்ன டாடாவா, பிர்லாவா என கலாய்ப்பது வழக்கம். ஏனெனில் இந்திய தொழில் சாம்ராஜ்யங்களை கட்டி எழுப்பி மக்களிடையே பிரபலமடைந்தவை டாடா மற்றும் பிர்லா குழுமங்கள்.
இதில் பிரபல ஆதித்யா பிர்லா குழுமம் நேற்று பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்க BirlaOpus பிராண்ட் அறிமுகம் செய்த நிலையில், தற்போது நகை விற்பனை தொழிலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்த குழுமம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமம்: இந்தியாவை சேர்ந்த தொழில் சாம்ராஜ்யங்களில் ஆதித்யா பிர்லா குழுமம் மிகவும் முக்கியமானது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆதித்யா பிர்லா குழுமம் பல நிறுவன பெயரில் பல துறைகளில் தொழில் செய்து வருகிறது.
உலோகங்கள், சிமெண்ட், ஃபேஷன், நிதி சேவைகள், ஆடை, ரசாயனங்கள், ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு என பல்வேறு துறைகளில் இவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
நகை விற்பனை தொழில்: ஆதித்யா பிர்லா குழுமம் விரைவில் நகை விற்பனையில் இறங்க உள்ளது. நாவல் ஜூவல்ஸ் லிமிடெட் என்ற பெயரில் வரும் ஜூலை மாதம் முதல் கடைகள் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரீடைல் நகை விற்பனையில் ஈடுபடுவதற்காக கடந்த ஆண்டிலேயே 5 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக இந்த குழுமம் அறிவித்திருந்தது. நாவல் ஜூவல்ஸ் மூலம் டாடாவின் தனிஷ்க், ரிலையன்ஸ்-ன் ரிலையன்ஸ் ஜுவல்ஸ் ஆகியவற்றுடன் போட்டிப்போட உள்ளது.
இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மக்களின் தேவைக்கு ஏற்ப நகை வடிவங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பிராண்டாக நாவல் ஜூவல்ஸை மாற்றுவதே நோக்கம் என்றும் இந்த குழுமம் தெரிவித்துள்ளது.
இதற்காக தனியாக குழு அமைத்து செயல்பட்டு வருவதாக ஆதித்யா பிர்லா குழுமம் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் நகை விற்பனை தொழில் வளர்ந்து வருவதாக கூறியுள்ள பிர்லா குழுமம், நவீன வடிவங்கள் மற்றும் மக்களின் நம்பகத்தன்மையை தக்க வைக்கும் விதமாக தங்களின் நகைகள் இருக்கும் என கூறியுள்ளது.
பெயிண்ட் தொழிலில் கால்பதிப்பு: ஆதித்யா பிர்லா குழுமத்தின் பிரதான நிறுவனமான கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் -இன் கீழ் பிர்லா ஓபஸ் என்ற பெயிண்ட் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் என முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது.
ஓராண்டுக்கு 1,332 மில்லியன் லிட்டர்கள் பெயிண்ட் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இந்நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஹரியானாவில் ஏற்கனவே பெயிண்ட் தயாரிக்கும் ஆலையில் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடுதலாக 5 இடங்களில் ஆலைகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது நகை விற்பனை தொழில் பற்றி அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.