டெல்லியை வாட்டி வதைக்கும் குளிர்: குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாக பதிவு
தலைநகர் டெல்லியில் இன்று கடும் குளிர் நிலவிவரும் சூழலில், குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளிலும் குளிர் அலையால் பனிமூட்டமான நிலை நீடித்தது. டெல்லியில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸாகவும், சனிக்கிழமை 3.6 டிகிரி செல்சியாஸகவும் பதிவாகியிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. மேலும் ஞாயிற்றுக்கிழமை, 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன, சுமார் 100 விமானங்கள் தாமதமாகிவிட்டன. மேலும் சில விமானங்கள் டெல்லி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், டெல்லியில் இன்று கடும் குளிர் நிலவிவரும் சூழலில், குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியியுள்ளது. அதோடு, லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.1 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர். நேற்று, டெல்லியில் குளிரை முன்னிட்டு நெருப்பு மூட்டியதில், புகை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.