அயோத்தி ராமரை 5 கோடி பேர் இலவசமாக தரிசிக்க பாஜக ஏற்பாடு
அயோத்தி ராமர் கோயில் வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. அப்போது, மக்களவை மற்றும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றால் ராமர் கோயில் கட்டப்படும் என அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு வந்தது.
இந்நிலையில், நவம்பர் 2019-ல் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன்படி, உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியது. பிரம்மாண்டமான இந்த கோயிலை அடுத்த மாதம் ஜனவரி 22-ல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 5 கோடி பேர் அயோத்தி ராமர் கோயிலில் இலவசமாக தரிசனம் செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, ‘ராம் தர்ஷன் அபியான்’ எனும் பெயரில் ஜனவரி 24-ல் தொடங்கும் ஆன்மிக யாத்திரை மார்ச் 24 வரை நடைபெற உள்ளது.
இதற்காக, ரயில்வே துறையில் நாடு முழுவதிலும் இருந்து 275 சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில், உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் 5 கோடி பேரும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம்,ராமர் தரிசனத்துடன், அயோத்தியின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி நாட்டு மக்கள் அறிய வைப்பதுதான் பாஜகவின் நோக்கம்.
ஜனவரி 22-ல் நடைபெறும் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதியும் நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்கள் இவ்விழாவுக்கு வர வேண்டாம் என ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனால், திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பாஜக செய்கிறது. இந்த இலவச ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் பிஹார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
வாராணசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ்நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணம், தங்குதல், உணவு என அனைத்து வசதிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்தது போல், அயோத்தி பயண ஏற்பாட்டை பாஜக செய்ய உள்ளது.
இதனிடையே, அயோத்தியின் சர்வதேச விமான நிலையத்தை வரும் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இத்துடன் புதிதாகக் கட்டப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த சமயத்தில், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான ஒத்திகையை நடத்த உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக உ.பி. அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்விழா, இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக அமையும்படி ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.