பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியும்… ஆனால் விவசாயிகள் கடனை..? ராகுல் கேள்வி..!

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணம் நடந்தது. இதில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியும் ஆனால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை. விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம். அதானி 18 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகளும் ஜிஎஸ்டி செலுத்துகின்றனர். ஜிஎஸ்டி மட்டுமின்றி, விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம் என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *