நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகளை போல நடத்தும் கட்சி பாஜக – கனிமொழி..!
2024 மக்களவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு திமுக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் மக்களவைத் தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், ” புரியாத மொழிகளில் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளதோடு மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள், மசோதாக்கள் என அனைத்தும் மாநில உரிமைகளையும், அடையாளங்களையும் அழிக்கக் கூடியதாக இருக்கின்றன. பாஜகவுக்கு வாக்களிக்காத மக்களின் நிலை என்னவானாலும் பரவாயில்லை என மத்திய அரசு நினைக்கிறது. சமஸ்கிருதத்துக்கு அள்ளிக்கொடுக்கும் மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒரு பைசா நிதி கூட தராமல் மோடி அரசு வஞ்சிக்கிறது. தமிழ் பழமையான மொழி என்பது மோடி சொல்வதற்கு முன்னரே எங்களுக்கு தெரியும்.
மத்திய அரசு நமக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொடர்ந்து தடைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக நாம் உருவாக்கியுள்ளோம். உத்தர பிரதேசத்திற்கு மத்திய அரசு நிதியை அள்ளிக் கொடுக்கிறது. அங்கு பாஜக. 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தும் ஏன் அது இன்னும் வளர்ச்சி பெறாத மாநிலமாக இருக்கிறது என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இந்தியா கூட்டணி வெற்றி பெறும் நாள் இந்திய நாடு வெற்றி பெறும் நாள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும், கோயில் கோயிலாக சென்ற பிரதமர் ஒரு முறையாவது பற்றி எரியும் மணிப்பூருக்கு செல்லவில்லை. மத்திய அரசு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை, நிறைவேற்ற போவதும் இல்லை. அறிவித்த ரூ. 15 லட்சம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. நாட்டிற்கே உணவளிக்கும் விவசாயிகளை தீவிரவாதிகளை போல நடத்தும் ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி” என்று அவர் பேசினார்