கர்ப்ப காலத்தில் ப்ளீடிங்: கருக்கலைப்பின் அறிகுறியா… வேறு பிரச்னையால் ஏற்படுவதா?
Doctor Vikatan: எனக்கு 27 வயதாகிறது. 4 மாத கர்ப்பிணி. திடீரென எனக்கு ப்ளீடிங் ஆனது. கரு கலைந்துவிட்டதாக நினைத்து மருத்துவரை அணுகினேன்
அவர் ஊசி போட்டு ஓய்வெடுக்கச் சொன்னார். இருந்தாலும் கருவிலுள்ள குழந்தை பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அதிகமாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆக என்ன காரணம்…. அதற்குத் தீர்வு என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு ஏற்படக்கூடாது என்பதை அறிவோம். ஆனால் சில பெண்களுக்கு அரிதாக அப்படி ப்ளீடிங் ஆவதுண்டு. கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.
இந்தப் பிரச்னைக்கான முக்கியமான காரணம் ‘இம்பிளான்ட்டேஷன் ப்ளீடிங்’ எனப்படும். அதாவது கருவானது கர்ப்பப்பையில் பதியும்போது சில நேரங்களில் ப்ளீடிங் ஆகலாம். இந்தக் காரணத்தால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிக்கு முழுமையான ஓய்வைக் கொடுத்து, புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அடங்கிய மாத்திரைகள் மற்றும் ஊசி கொடுக்கும்போது இந்தப் பிரச்னை சரியாகும். அந்தப் பெண்ணின் கர்ப்பமும் நல்லபடியாகத் தொடரும்.
அடுத்து ‘மிஸ்டு அபார்ஷன்’ (Missed Abortion) மற்றும் ‘த்ரெட்டெண்டு அபார்ஷன்’ (Threatened Abortion) என இரண்டு காரணங்களால் கர்ப்ப காலத்தில் ப்ளீடிங் ஆகலாம். கருவானது உருவான 6 முதல் 7 வாரங்களில் அதன் இதயத்துடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரியும். சில கருக்களில் அப்படி இருக்காது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது இதயத்துடிப்பு இருக்காது. இதுபோன்ற நிலையில், மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்ப்போம். அப்போதும் இதயத்துடிப்பு இல்லை என்றால் அதை ‘மிஸ்டு அபார்ஷன்’ என்று சொல்வோம். அசாதாரண கருவை இயற்கையே புறக்கணிக்கும் நிகழ்வு இது. இந்தப் பிரச்னை உள்ள கருவை அப்படியே வைத்திருப்பது சரியானதல்ல. மருந்துகள் கொடுத்து அதை வெளியேற்ற வேண்டியது முக்கியம்.
சில நேரங்களில் ஹார்மோன்களின் பிரச்னை காரணமாகவும் கர்ப்பிணிகளுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம்.இதை ‘த்ரெட்டெண்டு அபார்ஷன்’ என்று சொல்வோம். இந்தப் பிரச்னையிலும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அடங்கிய மாத்திரைகள் மற்றும் ஊசி கொடுத்து அந்தக் கர்ப்பத்தைக் காப்பாற்றிவிடலாம்.
இந்தப் பெண்களுக்கு ஸ்கேன் செய்யும்போது கருவின் இதயத்துடிப்பு நார்மலாகவே இருக்கும். எனவே ஓய்வு மற்றும் மருந்துகளின் உதவியோடு இவர்களது கர்ப்பத்தைக் காப்பாற்றிவிடலாம்.
குறைப்பிரசவம் மாதவிடாய் வலி… மெஃப்தால் ஸ்பாஸ் மாத்திரை… உஷார் பெண்களே… உஷார்!
எனவே கர்ப்பகால ப்ளீடிங் ஏற்பட என்ன காரணம் என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்துகொண்டபின் அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை முறையாகப் பின்பற்றவும்.