Blue Star: விளையாட்டில் சாதி அரசியல்.. ப்ளூ ஸ்டார் படம் எப்படி இருக்கு? பொதுமக்கள் கருத்து!
சென்னை: இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும், கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பார்க்கலாம்.
படம் வேறலெவல்: ப்ளூ ஸ்டார் படம் பார்த்த ரசிகர்கள் படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தின் நடிகர் நடிகைகளை இயக்குநர் அழகாக தேர்வு செய்து இருக்கிறார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் என அனைத்து கதாபாத்திரமும் ரசிக்கும் படி இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களின் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர். அதே போல அசோக் செல்வனின் தம்பியாக வரும் பிரித்வி கலக்கி விட்டார். படத்தில் வரும் ஒவ்வொரு சீரியஸ் சீனையும் காமெடியாக்கி விட்டார் என்றார்.
நல்ல தரமான படம்: படத்தை கொண்டு சென்ற விதமும், படத்தின் டெக்னிக்கல் காட்சியும் நன்றாக உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் நல்ல தரமான படத்தை இயக்குநர் கொடுத்து இருக்கிறார். கிராமத்தில் இருப்பவர்களுக்கும் நல்ல திறமை இருக்கும் என்பதையும், அவர்கள் நல்ல ஒரு இடத்தை அடைய எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் அழகாக காட்சிப்படுத்தி உள்ளார்.
சமூகநீதி: நீலம் ப்ரோடக்ஷன் என்றாலே அதில், இரண்டுவிதமான பார்த்தை இருக்கும் ஒன்று சமூக நீதி, மற்றொன்னு தலித் அரசியல் பேசுவார்கள் என்ற பார்வை இருக்கும். ஆனால், இந்த படத்தில் மாரிசெல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் வரும் அந்த அப்ரேசை இயக்குநர் ஜெய் அவர்கள் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். காலணியும் ஊரும் ஒன்றாக சேர வேண்டும் அப்படி சேர்ந்தால், கிரிக்கெட்டில் மட்டுமில்லை வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம் என்பதை இந்த படம் உணர்ந்துகிறது என்றனர்.