பீட்ரூட்டை வெச்சு இப்படி கட்லெட் செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. சத்தானதும் கூட..
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? முக்கியமாக பஜ்ஜி, போண்டா, வடை என்று எதுவும் வேண்டாம் என்று கூறுகிறார்களா? அப்படியானால் கட்லெட் செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கட்லெட் செய்யுங்கள். இந்த கட்லெட் செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இந்த கட்லெட் பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளையும் கேட்டு விரும்பி சாப்பிட வைக்கும்.
உங்களுக்கு பீட்ரூட் கட்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் – 1
* உருளைக்கிழங்கு – 3
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது)
* பூண்டு – 1 டீஸ்பூன் (துருவியது)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* சேமியா – 1/4 கப்
* பிரட் தூள் – 3/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* மைதா – 2-3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* எண்ணெய் – 4-5 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்டை போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கையும், பீட்ரூட்டையும் வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து, இறக்கி நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பச்சை பட்டாணியை நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து உருளைக்கிழங்கை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை பிளெண்டரில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட், சேமியா, மசாலா பொடிகள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவி கிளறி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதே வேளையில் ஒரு பௌலில் மைதா, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு தட்டில் பிரட் தூளை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தட்டி வைத்துள்ள கட்லெட்டை எடுத்து மைதாவில் பிரட்டி பின் பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டை சேர்த்து முன்னும் பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்தால், சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்.