இரண்டும் டாடா எலக்ட்ரிக் கார் தான்!! விலையிலும் பெருசா வித்தியாசம் இல்ல… எதை வாங்க போறீங்க?
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் மற்ற கார் நிறுவனங்களை காட்டிலும் மிகவும் தீவிரமாக உள்ளது. சமீபத்தில் கூட, பஞ்ச் இவி என்ற 4வது டாடா எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். மாடர்ன் ஸ்டைலிஷான தோற்றத்தை கொண்டிருந்தாலும், அளவில் சிறியதாக இருப்பதால் விலை குறைவான எலக்ட்ரிக் காராக டாடா பஞ்ச் இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்தியாவின் மற்றொரு விலை குறைவான எலக்ட்ரிக் காராக டாடா டியாகோ இவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு டாடா எலக்ட்ரிக் கார்களும் பல விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைமிக்க டியோகோ இவி வேரியண்ட்டை வாங்கும் அதே பணத்தில் பஞ்ச் இவி எலக்ட்ரிக் மத்திய-நிலை வேரியண்ட்டை வாங்கலாம். டியோகோ இவி டாப் வேரியண்ட்டிற்கும், பஞ்ச் இவி மிட் வேரியண்ட்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.
விலை: புதிய டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் மிட் வேரியண்ட்டாக ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் அட்வென்ச்சர் வேரியண்ட்டை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட இதே விலையில் டியாகோ இவி எலக்ட்ரிக் காரின் விலையுயர்ந்த வேரியண்ட்டான லாங் ரேஞ்ச் எக்ஸ்.இசட்+ டெக் லக்ஸ் -ஐ வாங்கலாம். இந்த டியாகோ இவி டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.04 லட்சமாக உள்ளது.
பரிமாண அளவுகள்: பஞ்ச் இவி ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியண்ட் காரின் நீளம் 3857மிமீ, அகலம் 1742மிமீ, உயரம் 1633மிமீ, வீல்பேஸ் நீளம் 2445மிமீ மற்றும் பூட் ஸ்பேஸ் 366 லிட்டர்கள் ஆகும். டியாகோ இவி லாங் ரேஞ்ச் வேரியண்ட்டை காட்டிலும் புதிய பஞ்ச் இவி ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் வேரியண்ட் 88 மிமீ நீளம் அதிகமானது, 63 மிமீ அகலமானது, 97 மிமீ உயரமானது ஆகும்.
அதேபோல், பஞ்ச் இவி கூடுதல் 45மிமீ நீளத்தில் வீல்பேஸை கொண்டு உள்ளது, அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம். பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி பஞ்ச் இவி ஸ்டாண்டர்ட் வேரியண்ட் கார் சுமார் 126 லிட்டர்கள் அதிக கொள்ளளவை கொண்டதாக உள்ளது.
தொழிற்நுட்ப வசதிகள்: புதிய மாடர்ன் எலக்ட்ரிக் காராக வந்துள்ளதால், பஞ்ச் இவி காரில் ஏகப்பட்ட அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. குறிப்பாக, முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்களை பஞ்ச் இவி பெற்றுள்ளது. ஆனால், டியாகோ இவி காரின் டாப் வேரியண்ட்டிலும் ஹலோஜன் ஹெட்லேம்ப் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் பஞ்ச் இவி காரில் வழங்கப்படவில்லை, டியாகோ இவி லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் கிடைக்கிறது.
அதேபோல், ஆடியோ சிஸ்டத்தை பஞ்ச் இவி 6 ஸ்பீக்கர்கள் உடன் மட்டுமே பெறுகிறது. அதுவே, டியாகோ இவி லாங் ரேஞ்ச் காரில் 8 ஸ்பீக்கர்களுடன் கிடைக்கிறது. மேலும், டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டத்தை பஞ்ச் இவி காரின் மிட் வேரியண்ட்களில் பெற முடியாது. ஆனால், டியாகோ இவி டாப் வேரியண்ட்டில் பெறலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் மறக்கடிக்கும் விதமாக 6 ஏர்பேக்குகள் உடன் பஞ்ச் இவி கிடைக்கும். ஆனால், டியாகோ இவி காரின் டாப் வேரியண்ட்டிலும் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
பவர்டிரெயின்: புதிய பஞ்ச் இவி காரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் 25 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. அதுவே, டியாகோ இவி லாங் ரேஞ்ச் வேரியண்ட்டில் 1 kWh திறன் குறைவாக, 24 kWh பேட்டரி பேக் கிடைக்கிறது. இந்த இரு எலக்ட்ரிக் கார்களிலும் கிடைக்கும் டார்க் திறன் (114 என்எம்) மற்றும் ரேஞ்ச் (315கிமீ)-இல் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், பஞ்ச் இவி மிட் வேரியண்ட்டில் 82 பிஎஸ் வரையிலும், டியாகோ இவி டாப் வேரியண்ட்டில் 75 பிஎஸ் வரையிலும் இயக்க ஆற்றல் கிடைக்கிறது.