பவுன்சர் கிங் நெய்ல் வாக்னர் ஓய்வு அறிவிப்பு.. ஜாம்பவான்களையே கதறவிட்ட நியூசிலாந்து பவுலர்

நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் நெய்ல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அவருக்கு 37 வயதாகும் நிலையில் ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த நெய்ல் வாக்னர், தன் நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் ஆட சரியான வாய்ப்பு கிடைக்காமல் 2008இல் நியூசிலாந்து நாட்டுக்கு குடி பெயர்ந்தார். அங்கே உள்ளூர் அணியில் இடம் பெற்று போராடி 2012ஆம் ஆண்டு நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வேகத்தில் துல்லியமாக பந்து வீசி வந்த நெய்ல் வாக்னர், பின்னர் அதை மேம்படுத்தி துல்லியமான பவுன்சர் வீசுவதில் உலகிலேயே தேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற பெயரை எடுத்தார்.

வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிய வாக்னர், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித்தை பல முறை ரன் எடுக்க விடாமல் திணற வைத்து இருக்கிறார். அவரது பவுன்சர்கள் பல பேட்ஸ்மேன்களின் உடலை தாக்கி இருக்கிறது. வேகப் பந்துவீச்சாளர்களால் தொடர்ந்து அதிக ஓவர்கள் வீச முடியாது என்ற கூற்றுக்கு மாறாக நீண்ட நேரம் தொடர்ந்து பந்து வீசும் ஆற்றல் கொண்டவர் வாக்னர்.

தனது 12 வயதில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மைக் ஆதர்டனுக்கு அச்சுறுத்தும் வகையில் பந்து வீசியதை பார்த்து ஈர்க்கப்பட்டு வேகப் பந்துவீச்சாளராக மாறினார் நெய்ல் வாக்னர்.

நியூசிலாந்து அணியில் 2012 முதல் 64 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அவர் 260 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவரது பவுலிங் சராசரி 27.57, ஸ்ட்ரைக் ரேட் 52.7 ஆகும். இது நியூசிலாந்து பந்துவீச்சாளர்களிலேயே இரண்டாவது சிறந்த ஸ்ட்ரைக் ரேட் ஆகும். சர் ரிச்சர்ட் ஹாட்லி மட்டுமே வாக்னரை விட சிறந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

நியூசிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ள நிலையில், அதற்கான அணியில் நெய்ல் வாக்னரை தேர்வு செய்யவில்லை. அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவலை நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் அவரிடம் கூறியதை அடுத்து தனது ஓய்வு முடிவை எடுத்தார் வாக்னர்.

இந்த நிலையில், நியூசிலாந்து அணி, அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அணியில் மாற்று வீரராக பங்கேற்று தங்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறு கூறி அவரை கவுரவப்படுத்தி இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் கேரி ஸ்டெட்-உடன் இணைந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் நெய்ல் வாக்னர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *