#BREAKING : இனி புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை..!
புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் குறித்து போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இதை சாப்பிட்ட சிலருக்கு உடல் நலம் மோசம் அடைந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கே சில பஞ்சு மிட்டாய்களை வாங்கி ஆய்வு செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறையினர் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதில் ‘பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். கார்சினோஜென் கெமிக்கல்கள் இதில் இருந்ததாக கூறப்படுகிறது. கார்சினோஜென் என்பது புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் தொகுப்பு ஆகும்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் குழந்தைகள் வாங்கி சாப்பிட பஞ்சு மிட்டாயில் ரொடமின் பி என்ற நச்சு பொருள் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உணவுத்துறை அதிகாரிகள் இவ்வளவு அடற் நிறமாக இருப்பதை கண்டுபிடித்து அவர்கள் பரிசோதனை செய்திருக்கிறார்கள்.யாரெல்லாம் இப்படிப்பட்ட பஞ்சு மிட்டாய் விற்பவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யவும், மேலும் விற்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெற வேண்டும் என்ற ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சில வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து வாங்கி வந்ததாக கூறியுள்ளனர்.
எனவே தமிழகத்திலும் இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படும் என நம்புகிறேன் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதன்தொடர்ச்சியாக, இனி புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் மூலப் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஒப்புதலோடு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய லைசென்ஸ் வழங்கப்பட்ட பிறகு தான் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அது வரை புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.