இலங்கையின் இனப்படுகொலை விசாரணையை புறக்கணிக்கும் பிரித்தானியா: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கனடாவும், ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவும் தடைகளை விதித்திருக்கும் நிலையில், பிரித்தானிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமை அவற்றுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கின்றது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியற் கோல்பேர்ன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடைகளை விதிப்பதன் மூலம் பொறுப்புக்கூறல் சார்ந்த அழுத்தத்தை வழங்கவேண்டும் எனவும், இலங்கையுடனான உறவை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் அந்நாட்டு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எலியற் கோல்பேர்ன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
தீவிர இராணுவமயமாக்கல்
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் மிகக் கொடூரமான இரத்த வெள்ளத்துடனேயே யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
சுமார் 70,000 – 170,000 தமிழர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமலும், அவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என்ற எடுகோள் அடிப்படையிலான தீர்மானத்துடனும் இந்தக் கறைபடிந்த கதை இன்னமும் நிலைபெற்றிருக்கின்றது.
போர்க்குற்றங்களையும், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்களையும், இனப்படுகொலையையும் அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதானது இப்பழைய காயங்களிலிருந்து மீள்வதை நோக்கிய பாதையில் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இலங்கையில் தமிழர்களினதும், முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனைய சிறுபான்மையின சமூகங்களினதும் நிலை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, மனித உரிமை மீறல்கள் மற்றும் தீவிர இராணுவமயமாக்கல் என்பன தொடர்கின்றன.
பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும், நிலைமாறுகால நீதியை அடைந்துகொள்வதிலும் இலங்கை அடைந்திருக்கும் தோல்வி, அங்கு நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை இலக்காகக்கொண்ட எதிர்பார்ப்புக்களை மழுங்கடித்துள்ளன.
மனித உரிமை மீறல்கள்
இலங்கையின் இனமோதலுக்கு மிகமுக்கிய காரணங்களாக அமைந்த பல தசாப்தகால செயற்திறனற்ற ஆட்சி நிர்வாகமும், தேசியவாத அரசின் கொள்கைகளும் தற்போதும் தொடர்வதுடன், அவை அண்மையகால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கும் வழிகோலியுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்யவேண்டும். ஏனெனில் செயற்திறன்மிக்க சர்வதேச விசாரணைப்பொறிமுறை மற்றும் தண்டனை அளித்தல் ஊடாகவே இலங்கையில் அர்த்தமுள்ள நீதியையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தமுடியும்.
அதன்மூலமே கறைபடிந்த இக்கறுப்புப் பக்கத்தைப் புரட்டமுடியும். கடந்த சில வருடங்களாக மாவீரர் தினத்தன்று வட, கிழக்குவாழ் மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும்போது, அதற்குப் பல்வேறு வழிகளிலும் தடையேற்படுத்தப்படல், மாவீரர்தின நிகழ்வுகளில் பங்கேற்றோருக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்படல் என்பன தொடர்கின்றன.
குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்குவைத்துப் பிரயோகிக்கப்படுகின்ற மிகமோசமான தன்மையைக்கொண்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பிரிட்டன் அரசாங்கம் வலுவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதேபோன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உலகளாவிய ரீதியில் பாரிய இராணுப்படையணியைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றான இலங்கை அதன் 20 இராணுவப்பிரிவுகளில் 18 பிரிவுகளை வட, கிழக்கு மாகாணங்களிலும், அவற்றில் 14 ஐ தனியாக வடக்கிலும் நிலைநிறுத்தியுள்ளது.
இராணுவமயமாக்கலை குறைத்திருப்பதாகவும், நீக்கியிருப்பதாகவும் அண்மையகாலங்களில் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது தென்படவில்லை. எனவே இவ்விடயத்தில் பிரிட்டன் அரசாங்கம் அதன் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக உத்தரவாதமளித்து, தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தாலும், அம்முயற்சிகளில் பலனேதுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
நீதிக்கட்டமைப்பில் நிலவும் குறைபாடு
தமிழ் சமூகம் அர்த்துமுள்ள நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கின்றார்களே தவிர, அவர்களுக்கு வெறும் வார்த்தைகள் தேவையில்லை. தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்படல், தண்டனைகளிலிருந்து விடுவிக்கப்படல் மற்றும் உயர் இராஜதந்திரப்பதவிகளுக்கு நியமிக்கப்படல் என்பன இன்னமும் தொடர்கின்றன.
இவை இலங்கையின் நீதிக்கட்டமைப்பில் நிலவும் குறைபாட்டையும், தண்டனை விலக்கீட்டை அரச நிர்வாகம் பொறுத்துக்கொள்வதையும் காண்பிக்கின்றன. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.
அதற்குரிய பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், பிரிட்டனின் மக்னிற்ஸ்கி சட்டத்தின்கீழ் எந்தவொரு குற்றவாளிக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படவில்லை.
கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், அமெரிக்கா ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராகவும் தடைகளை விதித்திருக்கும் நிலையில், இவ்விடயத்தில் பிரிட்டன் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமை அவற்றுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கின்றது.
எனவே இவ்விடயத்தில் பிரிட்டன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கையுடனான பிரிட்டனின் உறவு மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டுமென நான் கருதுகின்றேன்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை இலங்கை அதன் பாதுகாப்புப்படையிலிருந்து விலக்கும் வரை அந்நாட்டுடனான இராணுவ ஒத்துழைப்புக்களை பிரிட்டன் இடைநிறுத்தவேண்டும்.
அதுமாத்திரமன்றி அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோருக்கு பிரிட்டன் இராஜதந்திர உள்நுழைவு அனுமதியையோ அல்லது இராஜதந்திர பதவிகளை வகிப்பதற்கான அனுமதியையோ வழங்கக்கூடாது.
இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளையும் மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்வதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு தடைகளை விதிப்பதென்பது சிறந்த கருவியாக அமையும்.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.