வித்தியாசமான மனிதக்கடத்தலில் ஈடுபட்ட பிரித்தானியர் கைது
உலக நாடுகள் பலவற்றிலிருந்து, எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும் என்று, உயிரைப் பணயம் வைத்து, சிறு படகுகளிலும், குளிரூட்டப்பட்ட ட்ரக்குகளிலும் மக்கள் பயணிப்பதைக் குறித்த ஏராளம் செய்திகளைக் கேள்விப்பட்டுவருகிறோம்.
ஆனால், ஒரு பிரித்தானியர் வித்தியாசமாக பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குள் சிலரைக் கடத்த முயன்று, பொலிசில் சிக்கிக்கொண்டுள்ளார்.
வித்தியாசமான மனிதக்கடத்தலில் ஈடுபட்ட பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள Bromley என்னுமிடத்தைச் சேர்ந்த Houcine Argoub (32) என்னும் நபரையும், மொராக்கா நாட்டவரான Jamal Elkhadir (47) என்பவரையும் பொலிசார் கண்காணித்தவண்ணம் இருந்திருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கென்டிலுள்ள சாண்ட்விச் என்னுமிடத்தில் இருவரும் சந்தித்துள்ளார்கள். வேன் ஒன்றில் வந்த Argoub, தனது வேனை Elkhadirஇன் ட்ரக்கின் அருகில் கொண்டு நிறுத்தியுள்ளார். உடனே, வேனிலிருந்து இறங்கிய சிலர், ட்ரக்கில் ஏறியுள்ளார்கள்.
ட்ரக்கை வழிமறித்த பொலிசார் அதை சோதனையிட, ட்ரக்கின் பின்னால் 39 புலம்பெயர்வோர் பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் வட ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர்.
அவர்களை பிரான்சுக்குள் கடத்திச் செல்ல Argoubம் Elkhadirம் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இம்மாதம் 13ஆம் திகதி கிரௌன் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டார்கள்.
Elkhadirக்கு ஆறு ஆண்டுகள், ஒன்பது மாதங்களும், Argoubக்கு ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, மனிதக்கடத்தல்காரர்கள் புலம்பெயர்வோரை பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குக் கடத்தும் நிலையில், இவர்கள் ஏன் அந்த புலம்பெயர்வோரை பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு கடத்த முயன்றார்கள் என்பது தெரியவில்லை.