இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியர் உயிரற்ற நிலையில் கண்டெடுப்பு: மூன்றாவது மரணம்
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரித்தானியர் ஒருவர், கோவாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
கோவாவில் இப்படி வெளிநாட்டவர் ஒருவர் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்படுவது, டிசம்பர் 31க்குப் பிறகு இது மூன்றாவது முறையாகும்.
ஹொட்டல் கழிவறையில் இறந்துகிடந்த நபர்
இந்தியாவின் கோவாவிலுள்ள கனகோனா நகரில், பாலோலம் கடற்கரையை ஒட்டியுள்ள ஹொட்டல் ஒன்றில், ஆண்ட்ரூ (Andrew Mark Charlambides, 62) என்னும் பிரித்தானியர் தங்கியிருந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை, ஹொட்டலிலுள்ள கழிவறை ஒன்றில் அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மூன்றாவது சம்பவம்
ஆண்ட்ரூ உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ள பொலிசார், அவரது மரணத்தில் சந்தேகம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆண்ட்ரூ மரணம் குறித்து பிரித்தானிய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், இப்படி கனகோனா நகரில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளது, டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின் இது மூன்றாவது முறையாகும்.
டிசம்பர் 31ஆம் திகதி, அயர்லாந்து நாட்டவரான, Sinead Bridget McManus (49) என்னும் பெண், கனகோனாவிலுள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஜனவரி மாதம், அதாவது, இம்மாதம் 2ஆம் திகதி, அகோண்டாவில், Emma Louise (45) என்னும் பிரித்தானியப் பெண் தான் தங்கியிருந்த அறையின் அருகே உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் காம்பவுண்ட் சுவரின் மீது ஏற முயலும்போது கீழே விழுந்து உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
தற்போது, ஆண்ட்ரூ அதே கனகோனா நகரிலுள்ள ஹொட்டல் ஒன்றில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நகரில் மரணமடைந்த பிரித்தானியர்களின் எண்ணிக்கை மூன்றாகியுள்ளது.