சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்: வெளியாகியுள்ள பகீர் தகவல்

கனேடிய பல்கலைக்கழகங்களைப் போல, பிரித்தானிய பல்கலைக்கழகங்களும், சர்வதேச மாணவர்களிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பு
கனேடிய பல்கலைக்கழகங்கள், கனேடிய மாணவர்களை விட சர்வதேச மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பது உலகறிந்த விடயம். சர்வதேச மாணவர்கள்தான் கனேடிய பல்கலைக்கழகங்கள் லாபத்தில் செயல்பட காரணமாக இருக்கிறார்கள் என்றே கூறப்படுவதும் உண்டு.
இந்நிலையில், கனேடிய பல்கலைக்கழகங்களைப் போல, பிரித்தானிய பல்கலைக்கழகங்களும், சர்வதேச மாணவர்களிடம் அதிக கல்விக்கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கும் பிரித்தானிய மாணவர் ஒருவர், ஆண்டொன்றிற்கு தோராயமாக 9,250 பவுண்டுகள் கல்விக்கட்டணம் செலுத்தும் நிலையில், சர்வதேச மாணவர் ஒருவரோ, ஆண்டொன்றிற்கு இளங்கலைப் பட்டப்படிபிற்கு 38,000 பவுண்டுகளும், முதுகலைப் பட்டபடிப்பிற்கு 30,000 பவுண்டுகளும் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது.
மேலும், அதிக கல்விக்கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களுக்காக, அதாவது, சர்வதேச மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கு வசதியாக, பல்கலை நுழைவு விதிகள் நெகிழ்த்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நடவடிக்கை எடுக்க திட்டம்
புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அது தொடர்பாக பிரித்தானிய பல்கலை ஆணையம் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
அதன்படி, சர்வதேச மற்றும் பிரித்தானிய மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வித் திட்டங்களின் தரம் மற்றும் ஒப்பீட்டு நோக்கு தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்ததாக, பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் சேர்க்கைக்காக ஏஜன்டுகளை பயன்படுத்தும் நிலையில், அந்த ஏஜண்டுகளின் தரம் குறித்து மீளாய்வு மேற்கொள்ளபட்ட உள்ளது.
மற்றும், மாணவ மாணவியரை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கான விதிகள் குறித்தும் மீளாய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரித்தானிய பல்கலை ஆணையம் தெரிவித்துள்ளது.