பொங்கல் பண்டிகைக்காக வெண்கலப் பானைகள் விற்பனைக்கு குவிப்பு @ கோவில்பட்டி
கோவில்பட்டி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி யில் வெண்கலப் பானைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
தமிழர் திருநாளை முன்னிட்டு வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புது மணத் தம்பதிகளுக்கு தலைப் பொங்கல் சீர்வரிசை பொருட்களில் முக்கிய இடம் பிடிக்கும் வெண்கல உருளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட வெண்கல உருளிகள் கிலோவுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியில் இருந்து வெண்கல உருளிகளும், கும்கோணத்தில் இருந்து வெண்கல அகப்பைகளும் விற்பனைக்கு வருகின்றன. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், கோவில்பட்டி நகரக் கடைகளில் இவை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
கிலோ-வுக்கு ரூ. 100 உயர்வு: இது குறித்து, பாத்திரக்கடை உரிமையாளர் பொ.பிரபாகரன் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகைக்காக வெண்கல உருளிகள், அகப்பைகள், பித்தளைப் பானைகள் ஆகியவற்றை கடந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டோம். வெண்கல உருளிகள் ஒரு கிலோ முதல் 4 கிலோ வரை வந்துள்ளன. கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதேவேளை, கிலோ கணக்கு இல்லாமல் அளவுப்படி, அதாவது 1, 2 என எண்கள் கொண்ட வெண்கல உருளிகளும் உள்ளன.
இவை ரூ.800 முதல் ரூ.4,000 வரை விற்கப்படுகின்றன. வெண்கல அகப்பைகள் ரூ.150 முதல் ரூ.750 வரை விற்கப் படுகின்றன. பித்தளைப் பாத்திரங்கள் திருநெல்வேலி, கடலூர், திருப்பூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து வருகின்றன. இவை ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை என ரகத்துக்கும், தரத்துக்கும் ஏற்றவாறு விலை உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு கிலோவுக்கு மட்டுமல்ல அளவுக்கு ஏற்றவாறு ரூ.100 முதல் ரூ.125 வரை விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.