Budget 2024 Date and Time: இடைக்கால பட்ஜெட் எப்போது, எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது..? முழு விவரம் உள்ளே!
Budget 2024 Date and Time: பிப்ரவரி 1 ஆம் தேதி, அதாவது நாளை வியாழக்கிழமை, 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டானது புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இடைக்கால வரவுசெலவுத் திட்டத்திற்கான ஏற்பாடுகளையும் அரசாங்கம் நிறைவு செய்துள்ளது. பட்ஜெட்டுக்கு முன் நடத்தப்படும் அல்வா விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த பட்ஜெட் மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது, இதை எங்கு பார்க்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.
2024 பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2024ம் தேதி (நாளை) பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் (அநேகமாக) மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். நாட்டின் பொருளாதாரம் சுமூகமாகச் செயல்படுவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாத வகையிலும், பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை நிலைத்திருக்கும் வகையிலும் புதிய அரசு அமையும் வரை, இடைக்கால பட்ஜெட்டில், வருவாய், செலவு மதிப்பீடுகள் முன்வைக்கப்படுகின்றன.
இடைக்கால பட்ஜெட் எந்த நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது..?
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் முழு அதிகாரப்பூர்வ நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. அதன்படி, முதலில் நிதியமைச்சர் தனது வீட்டில் இருந்து நார்த் பிளாக்கிற்கு புறப்படுவார். அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் அதன்பிறகு நிறைவடையும். அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தொடங்கும்.
இன்று நடைபெறும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று புதன்கிழமை (ஜனவரி 31) தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறும்.