பட்ஜெட் விமான பயணம்.. இண்டிகோ செய்த சின்ன மாற்றம்.. இனி டிக்கெட் விலை குறையும்!

பட்ஜெட் கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகின்ற இண்டிகோ நிறுவனம் தற்போது எரிபொருள் கட்டணம் என்ற பிரிவை நீக்கியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்தபோது எரிபொருள் கட்டணம் என்ற பிரிவை சேர்த்து, கூடுதல் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் வசூல் செய்து வந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலில் இருந்த அந்தக் கட்டணம் தற்போது ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கட்டணம் சமீபத்தில் குறைந்ததைத் தொடர்ந்து கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமான எரிபொருள் விலை என்பது ஏற்ற, இறக்கங்களைக் கொண்டதாகும். அதற்கேற்ப எங்களின் கட்டணத்தை நாங்கள் அவ்வப் போது மாற்றி அமைத்து வருகிறோம். சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இது நிர்ணயம் செய்யப்படுகின்றது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு கட்டணம் குறையும்?

எரிபொருள் கட்டணம் என்ற பிரிவை இண்டிகோ நிறுவனம் நீக்கியுள்ள நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்வதற்கான கட்டணங்கள் ரூ.1,000 வரை குறையக் கூடும் என்று தெரிகிறது. உதாரணத்திற்கு 500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு எரிபொருள் கட்டணமாக ரூ.300, 501 முதல் 1000 கி.மீ. வரையிலான பயணத்திற்கு எரிபொருள் கட்டணமாக ரூ.400, 1001 முதல் 1500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு எரிபொருள் கட்டணமாக ரூ.550 என்ற வகையிலும்,

1501 முதல் 2500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு எரிபொருள் கட்டணமாக ரூ.650, 2501 முதல் 3500 கி.மீ. வரையிலான பயணத்திற்கு ரூ.800, 3,500 கி.மீ மற்றும் அதற்கு மேற்பட்ட தொலைவு கொண்ட பயணத்திற்கு ரூ.1,000 என்ற வகையிலும் கூடுதல் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் வசூல் செய்து வந்தது.

தற்போதைய சூழலில், எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்திருப்பதால், மேற்கண்ட விவரப்படி பயணிகள் பயணம் செய்யும் தொலைவைப் பொருத்து அவர்களுக்கான பயணக் கட்டணத்தில் ரூ.1,000 வரை குறையக் கூடும். உள்நாட்டு விமானப் பயணங்கள் மற்றும் சர்வதேச விமானப் பயணங்கள் ஆகிய இரண்டுக்கும் எரிபொருள் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நடவடிக்கை அனைத்து தரப்பினருக்கு பலன் அளிப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய விமானச் சேவைகள் :

மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ள இந்த நிதியாண்டிற்குள் இந்தோனேசியாவின் பாலி நகருக்கும், சவுதி அரேபியாவில் உள்ள மதினா நகருக்கும் புதிய விமானச் சேவைகளை தொடங்குவதற்கு இண்டிகோ விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நகரங்களுக்கு அதிகப்படியாகச் செல்லும் சுற்றுலா பயணிகளை கணக்கில் கொண்டு, புதிய சேவைகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *