Budget Meeting: நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்..!

Budget Meeting: நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில், இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

 

பட்ஜெட் கூட்டத்தொடர்:

ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து, பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய, பிப்ரவரி 1ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்:

இந்நிலையில், நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், இரு அவைகளில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து தரப்பினரும், ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. பொதுவாக ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும்.

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?

தேர்தல் நடைபெற உள்ள ஆண்டில் சமர்பிக்கப்படும் பட்ஜெட் பொதுவாக இடைக்கால பட்ஜெட் என குறிப்பிடப்படுகிறது. இந்த, இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. அதேநேரம், நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் இடம்பெறும்.

வரலாறு படைக்க உள்ள நிர்மலா சீதாராமன்:

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்று ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டைகளை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவதாக இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம், 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த மன்மோகன் சிங், அருண் ஜெட்லி, ப. சிதம்பரம் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் சாதனையை முறியடிக்க உள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *