பழைய பேருந்துகளில் புதிய பாடி கட்டுவது எங்கும் இல்லாத விந்தை. தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம்..!!
பழைய பேருந்துகளில் புதிய பாடி கட்டுவது எங்கும் இல்லாத விந்தையாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகத்தின் முன்பாக போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், செங்கோட்டையன், கேவி ராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் சின்னையன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :- மூன்று லட்சம் கிலோ மீட்டர் இயக்கப்பட்ட பழைய பேருந்துகளுக்கு புதிய பேருந்துகளைப் போல் பாடி கட்டுவது எங்கும் இல்லாத விந்தையாக உள்ளது. ஓய்வு பெற்று மூன்றாண்டு காலம் ஆகியும் பண பலன்கள் ஏதும் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்படுத்தும் நிலையில். பல குடும்பங்கள் கண்ணீர் சிந்துகின்றன.
எட்டு மணி நேரம் பணியாற்ற வேண்டிய ஊழியர்கள் 16 மணி நேரம் கூடுதல் பணி சுமையுடன் பணிபுரியும் சூழ்நிலை நிலவுகிறது. அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சரியாக இயங்காத நிலையில் அரசிடம் இருந்து போதிய நிதியை பெற்று துறைக்கான பணியாளர்களை நியமிப்பதோடு. பேருந்துகளை புதிதாக வாங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றார்.