`ராமர் கோயிலுக்காக உருவாக்கப்பட்ட நகரம்!’ – `நியூ அயோத்தி’ சிறப்பம்சங்கள் என்னென்ன?
அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தியா முழுவதும் அயோத்தி சார்ந்த விஷயங்கள்தான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது.
அயோத்தியில் அந்த ராமர் கோயிலுக்காக செய்யப்பட்டிருக்கும் இன்னபிற வசதிகளைப் பற்றியும் நாம் இங்கே பேசியாக வேண்டும்.
அயோத்தி கவர் ஸ்டோரி1984 இல் அயோத்திக்கு சென்று வந்து எழுத்தாளர் ஒருவர் ஆனந்த விகடனில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், ‘ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியை நகரம் என்பதை விட கிராமம் என்றே சொல்லலாம். காசியிலிருந்து 4 முதல் 4:30 மணி நேர பிராயணம், லக்னோ நகரத்திலிருந்து இரண்டரை மணி நேர பிராயணம். புண்ணிய நதியான சரயு அயோத்தியைச் சுற்றி ஓடுகிறது.’ இப்படித்தான் அந்தக் கட்டுரையை தொடங்கியிருப்பார். 80 களில் மட்டுமல்ல அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள் வரைக்குமே அயோத்தி ஒரு கிராமம்தான். குறுகலான தெருக்களாக நெரிசலான பகுதிகளாக பல இடங்களில் கெடுபிடியான காவல் கண்காணிப்புகளை கொண்ட ஆன்மீக கிராமம் அது. ஆனால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கியதிலிருந்து அந்த கிராமமும் நவீன நகரமாக உருமாறத் தொடங்கியது. கோயிலுக்கு வரவிருக்கும் பக்தர்களுக்காகவும் பயணிகளுக்காவும் அயோத்தியைச் சுற்றி எக்கச்சக்கமான நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டு ‘புதிய அயோத்தி’ என சொல்லுமளவுக்கு புது வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறது.
வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருபவர்களுக்கு வசதியாக புதிதாக விமான நிலையமும் இரயில் நிலையமும் கட்டப்பட்டிருக்கிறது. ராமர் கோயில் அமைந்திருக்கும் இடத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் 251 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இரயில் நிலையம் அமைந்திருக்கிறது. விமான நிலையங்களுக்குரிய செட்டப்போடு நவீன வசதிகளுடம் இந்த ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. அதிகப்படியான மக்கள் வந்து காத்திருந்து பயணங்களை மேற்கொள்வதற்கான விசாலமான இடவசதி செய்யப்பட்டிருக்கிறது.