Bullet Train: வேற லெவல்! சென்னைக்கு விரைவில் வருகிறது புல்லட் ரயில்! எந்தெந்த வழித்தடம்?
Bullet Train: சென்னை – மைசூர் இடையே இந்தியாவின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ரயில் சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத்தை காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயிலானது பயணிகளின் பயண நேரத்தை மேலும் குறைக்கும்.
புல்லட் ரயில்:
எனவே, புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், அதிவேக ரயில்களை கொண்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை வரை செல்லும் வகையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடனும் நிதி உதவியுடனுக்ம் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புல்லட் ரயிலின் முதல் ரயில் பாதைக்கான கட்டுமான பணிகள் வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை டூ மைசூர்:
இந்தியாவில் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை – மைசூர் இடையே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடங்கப்படும். இந்த புல்லட் ரயில், சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சிந்தூர், பங்காரபேட், பெங்களூரு, சன்னாபட்னா, மண்டியா வழியாக மைசூருக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னை – பெங்களூர் இடையே விரைவுச் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 90 மீ அகலம் கொண்ட இந்த அதிவிரைவுச் சாலையில் மணிக்கு 120 கி.மீ வேகம் வரை செல்லாம்.
இந்த சாலை கோலார், சித்தூர், வேலூர், காஞ்சிபுரம் வழியாக சென்னை வந்தடைகிறது. இந்த விரைவுச் சாலைக்கு அருகில் தான் புல்லட் ரயில் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, சென்னையில், பெங்களூரு, மைசூருவுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வந்தே பாரத் ரயில் 6 மணி நேரத்தில் சென்றடைகிறது. எனவே, விரைவில் அறிமுகமாக புல்லட் ரயில் 350 கி.மீ அதிகபட்ச வேகத்தில் செல்லும் நிலையில், வந்தே பாரத் ரயிலை பின்னுக்கு தள்ளுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.