2026ல் புல்லட் ரயில் இந்தியாவில் இயங்கும்! எங்கேன்னு தெரிஞ்சா இப்பவே டிக்கெட் புக் பண்ண முடியுமானு கேப்பீங்க!
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வரும் 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது வந்தே பாரத் ரயில் என்பது மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளில் உள்ள ரயிலுக்கு போட்டியாக வந்தே பாரத் ரயில் உருவாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில் இந்தியா விரைவில் புல்லட் ரயில் கொண்டு வர வேண்டும் என ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் படி குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து பிலிமோரா பகுதி வரை புல்லட் ரயில்களுக்கான கட்டுமானங்கள் நடந்து வருகிறது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்த கட்டுமானங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2026 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளார் இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது 270 கிலோ மீட்டர் தூரத்திற்கான தரைவழி புல்லட் ரயில் பாதை என்பது அமைக்கப்பட்டு விட்டதாகவும், புல்லட் ரயில்களுக்கான பவரை கொடுப்பதற்கான வயர்களை அமைக்கும் பணியும் 270 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டபடி புல்லட் ரயில்களுக்கான பணிகள் நடந்து வருவதாகவும் சரியான மைல் கல்களை மத்திய அரசு எட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புல்லட் ரயில் பாதை என்பது மும்பையில் இருந்து தானே வரை கடலுக்கு அடியில் செல்லும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் துவங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் 8 ஆறுகளை கடந்து செல்லும் பாலங்களை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதில் 2 பாலங்களில் பணிகள் முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
புல்லட் ரயில் நிலையமாக சபர்மதி ரயில் நிலையம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் பாதைக்கான 100 சதவீத நில எடுப்பு என்பது முடிந்து விட்டதாகவும் மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் சேவை என்பது விரைவில் வந்து விடும் எனவும் மற்ற சர்வதேச நாடுகளைப் போல இந்தியாவும் புல்லட் ரயில் கொண்ட நாடாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்காக ரூபாய் 1.50 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநில அரசுகள் தலா 5000 கோடி ரூபாயையும் மிச்சம் உள்ள பணத்தை ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஏஜென்சி மூலம் ஆண்டுக்கு 0.1 சதவீத வட்டியில் கடனாக பெற்று இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்படி சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 2 மணி நேரத்தில் கடந்து செல்லும் வகையில் ரயில்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர இந்த திட்டம் துவங்கப்பட்டது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிம்கார்டுஷன் டெக்னாலஜி என்ற நிறுவனம்தான் இந்த கட்டுமான பணிகளை செய்து வருகிறது.