புர்ஜ் கலிஃபா.. பெருமை போச்சே.. போட்டிக்கு வரும் ஜெட்டா டவர்ஸ்.. இத்தனை சிறப்புகளா?
அபுதாபியில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா, விரைவில் இந்த அந்தஸ்த்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மனித கட்டுமானங்களில் தலைசிறந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது புர்ஜ் கலிஃபாதான். சுமார் 163 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம், 828 மீட்டர் அதாவது 2,716.5 அடி உயரம் கொண்டிருக்கிறது. இன்னும் புரியும்படி சொல்வதெனில் இந்த கட்டிடத்திலிருந்து கீழே குதித்தால் பூமிக்கு வந்து சேர சுமார் 17.5 விநாடிகள் ஆகும். இதனை கட்டி முடிக்க 6 ஆண்டுகள் வரை ஆனது. மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில்தான் இந்த கட்டிடம் அமைந்திருக்கிறது.
எங்கு பார்த்தாலும் வெறும் மணலை மட்டும் கொண்டிருக்கும் அரபு நாட்டில் இந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டது எண்ணெய் வளத்தால்தான். உலகம் முழுவதும் கச்சா எண்ணெயக்கான தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. எனவே இந்த நாடுகளுக்கு நிலையான வருமானமும் குவிந்தது. இதுதான் இந்த அளவு வளர்ச்சிக்கான முக்கிய காரணமாகும். ஆனால், உலகின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் அபுதாபியின் புர்ஜ் கலிஃபா, விரைவில் இந்த பெருமையை இழக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கான காரணம், மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சவுதி அரேபியாவில் கட்டப்பட உள்ள உயரமான கட்டிடம்தான். சவுதியின் கடற்கரை துறைமுக நகரமான ‘ஜெட்டாவை’ மேம்படுத்த அந்நாட்டின் இளவரசர் அல்-வலீத் பின் தலால் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார். அதன்படி இந்நகரம் பொருளாதார நகரமாக வடிவம் பெற இருக்கிறது. இதற்கான கட்டுமானங்கள் கடந்த 2013ம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டன. இது 2030ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த நகரத்தின் தனிச்சிறப்பாக ‘ஜெட்டா டவர்ஸ்’/ ‘கிங்டம் டவர்’ எனும் கட்டிடம் இருக்கும். இந்த கட்டிடத்தை புர்ஜ் கலிஃபாவை வடிவமைத்த ஏட்ரியன் ஸ்மித் எனும் புகழ்பெற்ற கட்டிட கலைஞர்தான் வடிவமைத்திருக்கிறார். இதன் உயரம் 3,307 அடி, மொத்தம் 165 மாடிகள். இதன் உச்சியிலிருந்து குதித்தால் பூமியை வந்து சேர 20 விநாடிகள் வரை ஆகும். இந்த கட்டிடத்தின் 157வது மாடியில் மக்கள் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதற்கான தனியான இடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இது விரைவில் கட்டி முடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அப்படி கட்டி முடிக்கப்பட்டால் உலகின் முதல் 1 கி.மீ கட்டிடம் இதுவாகத்தான் இருக்கும். எனவே புர்ஜ் கலிஃபா, ‘உலகின் உயரமான கட்டிடம்’ என்கிற தனது அந்தஸ்தை இழந்துவிடும். ஆனால் இதனை வெற்றிகரமாக கட்டி முடித்தாலும், பயன்பாட்டுக்கு வரும்போது சில சிக்கல்களை எதிர்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதாவது, அரசு நாடுகளில் மணல் புயல்கள் அடிக்கடி ஏற்படும். மட்டுமல்லாது இவ்வளவு உயர கோபுரத்தை காற்று கடுமையாக தாக்கும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் இதையெல்லாம் சமாளிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பொறியாளர்கள் கூறுகின்றனர்.