195 நகரங்களில் வியாபாரம்…27 வயதில் ரூ.150 கோடி சொத்து..அனுபவ் துபே பற்றி தெரியுமா..?
27 வயதே ஆன இளம் தொழிலதிபராக வளம் வருகிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனுபவ் துபே. 20 வயதில், நான் தொழில் தொடங்க உள்ளேன் என்று கூறினால் சுற்றி இருப்பவர்களின் பார்வைக் கண்டிப்பாகக் கேலியாகத் தான் இருக்கும். இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் இனி அப்படி நினைக்க மாட்டார்கள். ஏனென்றால், 20 வயதில் வெறும் 3 லட்சம் வைத்து தொழில் தொடங்கிய அவர் இன்று 150 கோடி மதிப்பு மிக்க நிறுவனத்திற்கு அதிபராக உயர்ந்துள்ளார்.
அப்படி என்னதான் தொழில் தொடங்கினார் என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். 2016 ஆம் ஆண்டு ஒரு டீ கடையைத் தொடங்கி இன்று 195 மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய அளவில் கிளைகள் கொண்டுள்ள ”சாய் சுட்டா பார்” டீ கடையில் நிறுவனர் இவர்தான்.
1996 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தில் பிறந்தவர் அனுபவ் துபே. B.Com படிப்பை முடித்த இவரை, அவரின் அப்பா IAS அதிகாரியாகப் பார்க்க விரும்பியுள்ளார். அதற்காக டெல்லியில் பயிற்சி எடுத்துத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். மேலும் CA போன்ற போட்டி தேர்வுகளையும் எழுதி தோல்வி அடைந்துள்ளார். அப்போது, நமக்கு 9-6 கணக்கு அலுவலக வேலைப்பார்ப்பதை விடத் தொழில் தொடங்குவதே சிறந்தது என்று தொழில் தொடங்க முயற்சிகளை எடுத்துள்ளார்.
அப்போது தான், B.Com படித்த ஆனந்த நாயக் என்றவருடன் இணைந்து வெறும் 3 லட்சம் முதலீட்டில் ஒரு டீ கடை தொடங்கியுள்ளார். இதர டீ கடைகளுடன் ஒப்பிடுகையில் அவர்களின் கடை வித்தியாசப்பட மண் குவளையில் டீ வழங்கி வந்துள்ளனர். மேலும், கடையில் புகைப்பிடிப்பதை தடை செய்துள்ளனர். முதல் கடையே பெண்கள் விடுதிக்கு அருகில் அமைந்ததினால், அவர்களின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது.
முதல் கடைக்கு மேசை, நாற்காலி போன்ற பொருட்களை நண்பர்கள் உதவியுடன் பெரும்பாலும் உபயோகித்த பொருட்களையே வாங்கியுள்ளனர். பெயர்ப் பலகையை கூட ’சாய் சுட்டா பார்’ என கையில் எழுதி வைத்துள்ளனர். முதற்கட்டத்தில் நிதி அடிப்படையில் கஷ்டங்கள் இருப்பினும் விடாப்பிடியாக அவர்கள் பின்பற்றிய முறை பல்வேறு பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்களைக் கொடுத்தது.
தொடர்ந்து, மண் குவளையில் சுமார் 20 டீ வகைகளை அறிமுகம் செய்துள்ளனர். இவர்களின் இந்த கடின உழைப்பும், விடாமுயற்சியும் சேர்ந்து தொழிலைப் பெருக்குவதற்கு உதவியுள்ளது. சுகாதாரமான சூழலில் மண் குவளையில் 20 வகை டீ என்பது தற்போதைய கால இளைஞர்களின் இடையே பிரபலமடையத் தொடங்கி விட்டது.
தொடங்கிய சில வருடங்களிலேயே அடுத்தடுத்து 165 கடைகளை 195 மேற்பட்ட நகரங்களில் தொடங்கிவிட்டனர். இந்தியா மட்டுமின்றி துபாய் மற்றும் ஓபன் நாடுகளிலும் இவர்களின் ’சாய் சுட்டா பார்’ டீ கடைகள் உள்ளது. தற்போது இந்தியாவிலேயே மண் குவளையில் டீ வழங்கும் முதன்மையான டீ கடை Franchise தொழிலாக ’சாய் சுட்டா பார்’ மாறியுள்ளது.
’சாய் சுட்டா பார்’ கடைக்களில் பயன்படுத்தப்படும் மண் குவளைகள் உள்ளூர் குயவர்களிடம் வாங்கப்படுகிறது. இதனால், சுமார் 250 குயவர்கள் குடும்பங்கள் நலன் அடைக்கின்றனர்.
இந்த வருடத்தில் இவர்கள் நிறுவனத்தில் வருவாய் மட்டும் சுமார் 150 கோடியாக உள்ளது. டீ மீது உள்ள அலாதி விருப்பத்தினால், அதனையே தொழிலாகத் தொடங்கி தனித்திறமையால் 27 வயதில் சுமார் 150 கோடி மதிப்பு மிக்க நிறுவனத்தை உருவாக்கிய அனுபவ் துபே-வின் வெற்றி மனநிறைவுடன் பாராட்டத்தக்கது.