அமலுக்கு வந்தது சிஏஏ சட்டம் : முழு விவரம் ஒர் பார்வை..!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி என பல மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பல மத்திய அமைச்சர்கள் 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் சிஏஏ அமலாகும் என உறுதிப்பட கூறியிருந்தனர். அந்த வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன, அதன் விதிகளால் யாருக்கு பயன், பாதிப்புகள் வரும் என எதிர்க்கட்சிகள் கூறும் காரணங்களை இதில் காணலாம்.
சிஏஏ என்றால் என்ன?
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் உட்பட இஸ்லாமியர் அல்லாத குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. மத வன்முறையால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்த இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.
எதிர்கட்சி தலைவர்கள் முதல் பாஜக ஆட்சி செய்யாத மாநில முதலமைச்சர்கள் என பலரும் இச்சட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த சட்டத்தை திரும்பப் பெற கோரி 2019ஆம் ஆண்டில் பலத்த போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தன. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதன்மூலம், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள், வங்கதேசத்தில் இருந்து வந்த ரோஹிங்கியாக்கள், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் அசாமில் NPR மூலம் குடியுரிமை இல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்ட சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். இருப்பினும் இது குடியுரிமை அளிப்பதற்கான சட்டமே தவிர, குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து வாக்குறுதியை பாஜக அளித்திருந்த நிலையில், அதனை 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன் அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.