சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது: உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!
குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு கடந்த 11ஆம் தேதி தினம் மாலை அறிவிப்பானை வெளியிட்டது. சிஏஏ சட்டத்திற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நம் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை, அதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்ற அவர், மக்களவை தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன். சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றார்.
“இஸ்லாமியர்களுக்கும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான உரிமை உள்ளது, யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை, போதிய அவகாசம் எடுத்து கொள்ளலாம்.” எனவும் அமித் ஷா தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து பேசிய அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ஒருவர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் சட்டத்தை ரத்து செய்வோம் என்கிறார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. “இந்தியா கூட்டணி கட்சிகளுக்கே கூட தெரியும் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் என்று. சிஏஏ சட்டம் பாஜக மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அதை ரத்து செய்வது சாத்தியமில்லை. அதனை ரத்து செய்ய நினைப்போருக்கு வாய்ப்பளிக்காமல் நாடு முழுவதும் அதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவோம்.” என்றார்.