நெல்லை லோக்சபா தொகுதியை வெல்ல முடியுமா திமுக? சர்ச்சைகள் சூழ் ஞான திரவியம்! யார் இந்த கிரகாம்பெல்?
சென்னை: திருநெல்வேலி மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாமிரபரணி பாய்ந்தோடும் வளம்மிக்க தொகுதி திருநெல்வேலி. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பாபநாசம் பவர் பிளான்ட் தொடங்கி, வங்காள விரிகுடா கடற்கரையில் கூடங்குளம் அணுமின் நிலையம் வரையில், பரந்து விரிந்த இந்தத் தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். பீடிசுற்றும் தொழிலில் மட்டும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மீன்பிடித் தொழிலாளர்களும் கட்டுமானத் தொழிலாளர்களும் பெருமளவில் வாழ்கிறார்கள். அதிகளவில் இருக்கும் கல்வி நிறுவனங்களால், ‘தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு’ என வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டை, பிரசித்திபெற்ற சைவ, வைணவத் தலங்கள், இஸ்ரோ கட்டுப்பாட்டில் செயல்படும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்துதளம், கடற்படைத் தளம் ஆகியவையும் இந்தத் தொகுதிக்குள்தான் வருகின்றன.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில், கிராமப்புறப் பகுதிகளே அதிகம். இந்து நாடார், கிறிஸ்துவ நாடார், முக்குலத்தோர், யாதவர், பட்டியலினத்தவர், வேளாளர் , இஸ்லாமியர்கள் எனப் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து வாழும் இந்தத் தொகுதியில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம்
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம். ராதாபுரம் அருகிலுள்ள ஆவரைகுளம்தான் ஞானதிரவியத்தின் சொந்த ஊர். அன்னை குழும நிறுவனங்களின் நிறுவனரான இவருக்கு தென்காசி, பழவூர், பணகுடி பகுதிகளில் சொந்தமாக காற்றாலைகள் இருக்கின்றன. அவை போக, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பிசினஸ்களிலும் ஈடுபட்டுவருகிறார்.
பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே ஆட்சியரை, அவர் மிரட்டிய காட்சி தமிழ்நாட்டையே அதிரவைத்தது. நெல்லை திருமண்டலத்தில், பேராயர் பர்னபாஸுக்கும், ‘லே’ செயலாளர் ஜெயசிங்குக்கும் இடையேயான பனிப்போரில், ஜெயசிங் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டார் ஞானதிரவியம். தனது எம்.பி பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, சி.எஸ்.ஐ திருமண்டலத்தின் கீழ் வரும் ஜான்ஸ் பள்ளியின் தாளாளர் பதவி மற்றும் உயர்கல்வி நிலைக்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்பு
களிலிருந்து ஞானதிரவியம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரின் ஆதரவாளர்கள் திருமண்டல அலுவலகத்துக்குச் சென்று பேராயரின் ஆதரவாளர்களைத் தாக்கியதாக எம்.பி ஞானதிரவியம் உட்பட அவரின் ஆதரவாளர்கள் 33 பேர்மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. ஞானதிரவியத்தின் அடாவடி அரசியல், சர்ச்சைப் பேச்சால் சொந்தக் கட்சியினரே அவருக்கு மீண்டும் சீட் கிடைத்து விடாதபடி முட்டுக்கட்டை போடுகிறார்கள்.