நமது உள்ளங்கைக்கு இவ்வளவு சக்தி இருக்கா? ஏன் 4-வது விரலில் மோதிரம் அணிகிறோம் தெரியுமா?

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தினமும் காலை எழுந்த உடன் தங்கள் இரு கரங்களையும் சேர்த்து உள்ளங்கையை பார்ப்பதை நம்மில் பலரும் பார்த்திருப்போம். ஆனால் ஏன் இதை செய்கின்றனர். தினமும் காலையில் உள்ளங்கையை பார்ப்பதால் அவர் வீட்டில் மங்கள் பெருகும் என்பது ஐதீகம். உள்ளங்கையில் சக்தி, சரஸ்வதி, லட்சுமி, என மூன்று அன்னையரும் தங்குவதாகவும், தினமும் காலையில் இவர்களை நினைத்து உள்ளங்கையை பார்த்தால் கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் நமக்கு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. இது மட்டுமல்ல உள்ளங்கை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

குளிக்கும்போதும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போதும் தவிர்த்து மற்ற எந்த நேரங்களிலும், எந்த காரணம் கொண்டும் தலையில் உள்ளங்கையை வைக்க கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அப்படி வைத்தால் நாம் பெற்றுள்ள கர்ம வினை பாவங்கள் பெருகிவிடும். அதுவே நம் வீழ்ச்சிக்கு காரணமாகவும் இருக்கும். எனவே சூரிய நமஸ்கார வேளை, குளியல் வேளை, எண்ணெய் தேய்க்கும் போது தவிர மற்ற வேளையில் உள்ளங்கையை தலையில் படும்படி வைக்கவே கூடாது.

எப்போதெல்லம் உள்ளங்கை தலையில் படக்கூடாது?

ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது.
பெண்களுக்கு சனிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது .
செவ்வாய்கிழமை யாருக்குமே சூரிய நமஸ்கார வேளைக்கு பிறகு உள்ளங்கை தலையில் படக்கூடாது. அதற்கு முன் படலாம்.
பொதுவாக சூரிய உதயத்திற்கு முன் உள்ளங்கை தலையில் பட்டால் தோஷமில்லை.
சூரிய உதயத்திற்கு பின்பு அவசியமான காரணமின்றி உள்ளங்கை தலையில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
இரவில் உறங்கும்போது கூட தலையில் கை வைக்காமல் தூங்குவதே சிறந்தது.
தலையில்,கன்னத்தில் காதில் உள்ளங்கை படும்படி வைத்து படுத்துறங்கினால் எந்நிலையில் உள்ளவராயினும் தரித்திரம் பிடிக்கும். எனவே கவனம்தேவை .
காலை எழுந்ததும் உள்ளங்கைகளை கண்களால் பார்த்து வணக்கத்துடன் ஒற்றிக்கொள்ளும் முறையை
தொடர்ந்து செய்து வர மகா அதிஷ்டசாலியாக வருவீர்கள்.
நம் இரு உள்ளங்கையையும் பூமியில் நன்கு பதியும்படி வைத்து அழுத்தினாலே நம்மிடம் உள்ள சக்திகளை அன்னை பூமாதேவி எடுத்துக் கொள்வார். அது பாவ சக்தியானாலும் சரி. தர்ம சக்தி ஆனாலும் சரி, ஞான சக்தி ஆனாலும் சரி அன்னை பூமாதேவி நம்மிடமிருந்து எடுத்துக் கொள்வார், ஆனால் ஒட்டு மொத்தமாக நம்மிடமிருந்து எடுக்காமல் கொஞ்ச கொஞ்சமாக தர்மத்திற்கு கட்டுப்பட்டவர் போல் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்வார்.

இதனால் செய்த பாவத்தினால் அதிகமாக சிரமப்படுபவர்கள் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து தன் பாவத்தை இறக்கி கொள்ள ஒரு கல்லை பூமியோடு பதித்து வைத்திருப்பார்கள், அதற்கு பலிபீடம் என்று பெயர். இது நமது கர்ம வினை பாவத்தையெல்லாம் பலி செய்யக்கூடிய இடமாகும். மனதால் விடமுடியாத பாவங்களை நமது உள்ளங்கை மூலம் பூமியில் விடமுடியும். மனதால் தாங்க முடியாத துன்பத்தை நமது உள்ளங்கையால் பூமிக்கு கொடுத்து ஆறுதல் தேட முடியும்.

எனவே ஆலயம் சென்றவுடன் ஆலயத்தில் இரு உள்ளங்கையையும் வைத்து உங்களது பாவத்தை இறக்கி கொள்ள பூமியோடு பதித்து வைத்திருக்கும் கல்லில் (பலிபீடத்தில்)உங்களது உள்ளங்கைகளை வைத்து பாவத்தை இறக்கிவிட்டால் மீண்டும் ஆலயம் விட்டு வீடு திரும்பும் வரையில் வேறு எங்கும் உங்களது உள்ளங்கைகளை வைக்கக்கூடாது. ஏனென்றால் உங்களது உள்ளங்கை அவ்வளவு சக்தி நிறைந்துள்ளதாக மாறி இருக்கும்.

அதே போல சாப்பிடும்போது நமது கையை குறிப்பாக உள்ளங்கையை பூமியில் ஊன்றி சாப்பிட்டால் நமது சத்து முழுக்க பூமியில் உறிஞ்சப்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும், அதே போல் ஆலயத்தில் சாமி கும்பிட்டபின் கொடிமரத்தின் முன்பாக விழுந்து கும்பிட்டு இரு உள்ளங்கையையும் பூமியில் ஊன்றி எழுந்தால் அந்த ஆலயத்தில் பெற்ற சக்திகள் அனைத்து பூமியால் உறிஞ்சப்பட்டு வெறும் ஆளாய் வீட்டிற்கு வருவோம்.

செவ்வாயின் இடமாக உள்ளங்கை கருதப்படுகிறது. எனவே அதில் எதை செய்தாலும் மங்களம் பெருகும். ஆலயத்தில் வழங்கப்படும் பூ,விபூதி,சந்தனம்,குங்குமம், தீர்த்தம் மற்றும் பிரசாதம் அனைத்தையும் உள்ளங்கைகளில் தான் வாங்குகிறோம். தீர்த்தம்,பிரசாதம் ஆகியவற்றை உள்ளங்கைகளில் வைத்துதான் சாப்பிடுகிறோம்.

உள்ளங்கையில் தண்ணீர் ஊற்றி ஆசீர்வதித்தாலும் பலிக்கும்,சாபம் கொடுத்தாலும் பலிக்கும், ஏன் இந்த உள்ளங்கைக்கு மட்டும் இத்தனை சக்தி? முப்பெரும் தேவியரும் சங்கமிக்கும் இடம் என்பதே இதற்கு காரணம். பூமாதேவியுடன் நமது உள்ளங்கை இணையும்போது நமது உடல் சக்தி உறிஞ்சப்படுவதால் நமது உள்ளங்கையில் நிறைந்திருக்கும் இந்த முப்பெரும் தேவியரின் சுப சக்திகளையும் நாம் இழக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

நமது உள்ளங்கை யார் தலையில் படுகிறதோ அது தீட்சையாகும், அதனால்தான் அநாவசியமாக யார் தலையிலும் கை வைக்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. நமது உள்ளங்கையில் விட்டு குடிக்கும் நீர் கூட நோயை போக்கும் சக்தியை கொடுக்கும் மந்திர நீர் ஆக மாறும். தர்மம் கூட ஒருவரின் உள்ளங்கையில் இட்டால் கொடுத்தவரைவிட வாங்கியவருக்கு சக்தி போய்விடும். அதனால் தான் பாத்திரத்தில் தான் பிச்சை இட வேண்டும், கையில் தரக்கூடாது என்பார்கள்.

இவ்வளவு மகத்துவம் மிக்க உள்ளங்கை பூமியில் பட்டால் மட்டும் அனைத்தும் பறிபோய்விடும். ஏன் தெரியுமா? இந்த உடல் வளர்ந்தது இந்த பூமியால்தான். நம்மை சுமப்பதும் இந்த பூமிதான். எனவே நம் சக்தியை உறிஞ்சும் அத்தனை உரிமையையும், பூமாதேவிக்கு உண்டு. எனவே இந்த சக்தியை கொடுப்பதும் தக்க வைத்துக் கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது .

இன்றைய காலத்தில் நெற்றி நிறைய விபூதி பூசினால் முக அழகு போய்விடும் என நினைத்து மோதிர விரலால் சிறிதளவு விபூதி எடுத்து வைத்து நெற்றியில் பூசிக்கொள்வதன் மூலம் உள்ளங்கையின் அளப்பரிய சக்தியை பெற பலரும் தவறுகின்றனர். பிரசாதம் மற்றும் தீர்த்தம் மட்டும் தான் உள்ளங்கையால் சாப்பிடுகிறார்கள். உள்ளங்கை மூலம் அன்னை பூமாதேவி நமது சக்தியை உறிஞ்சி விடுவாள் என்பதால்தான் அநாவசியமாக பூமியின்மீது சத்தியம் அடித்து செய்யக்கூடாது நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அன்னை பூமாதேவி உள்ளங்கை மூலம் நமது சக்தியை உறிஞ்சி கொள்வதை தடுக்கும் சக்தி நம்முடைய மோதிர விரலுக்கு மட்டுமே உண்டு என்பதை கண்டுபிடித்த நம் முன்னோர்கள் மோதிர விரலில் ஒரு கட்டு இருந்தால் நம் உள்ளங்கை பூமியில் பட்டாலும் சக்தி விரையமாகாது என்பதை கண்டறிந்தனர். இதன் காரணமாகவே மோதிர விரலில் மோதிரம் அணியும் முறையை கொண்டு வந்தனர். அதன்பின்னரே மோதிர விரல் என்ற பெயரும் வந்தது

மேலும் மோதிர விரலில் கட்டு இல்லாமல் ஆகாய சக்திக்கு நாம் எதையும் கொடுக்க முடியாது என்பதால் தான் நமது பித்ருக்களுக்கு எள்நீர் தானம் கொடுக்கும்போது மோதிர விரலில் தர்பையால் பவித்ரம் (மோதிரம்) அணியும் முறையும் கொண்டு வந்தார்கள் .

இதே போன்று கை மணிக்கட்டில் கட்டுப் போட்டாலும் பூமி நம் சக்தியை உறிஞ்சாது என்பதால் பெண்களுக்கு கைகளில் வளையல் அணியும் முறை கொண்டு வரப்பட்டது. பூமா தேவி நம் சக்தியை உள்ளங்கை மூலம் உறிஞ்சுவதால் நமது பாவம் மட்டும் போனால் பரவாயில்லை, புண்ணியமும் சேர்ந்து போய்விடுகிறது என்பதுதான் இதிலுள்ள பிரச்சனை. எனவே தான் பெரியவர்கள் ஆண்களுக்கு மோதிர விரலில் ஒரு வளையமும்,பெண்களுக்கு கை மணிக்கட்டில் வளையலும் இருக்க வேண்டும் என்ற முறையை கொண்டு வந்தார்கள்.

நமது சக்திகளை தூண்டக்கூடியதும் வெளியேற விடாமல் தடுக்கக் கூடியதும் மோதிர விரலே. அதற்கு நிலம் என்றும் சூரியன் என்றும் பெயர் உண்டு.

4-வது விரலை ஏன் மோதிர விரல் என்று சொல்கிறோம் தெரியுமா?

நம் ஐந்து விரல்களுமே, நமது ஐந்து சொந்தபந்தங்களை குறிக்கின்றன. அதாவது பெரு விரல் (கட்டை விரல்) உங்களது பெற்றோரை பற்றி குறிக்கின்றது. ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை பற்றியும், நடு விரல் உங்களை பற்றியும், மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை பற்றியும்,சிறிய விரல் (சுண்டு விரல்) உங்களின் பிள்ளைகளை பற்றியும் குறிக்கிறது. உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக ஒட்டி இருக்கும்படி செய்யுங்கள். அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிர விரலில் மோதிரம் அணிய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது

கைகளில் சூரிய விரலில் மோதிரம் இருந்தால் எதிரியின் மாந்திரிக சக்தி கூட அவ்வளவு எளிதில் நம்மில் வேலை செய்யாது என்றும் கூறப்படுகிறது. அதே போல் மணிக்கட்டில் செம்பினால் ஆன ஒரு வளையம் அணிந்திருந்தால் ஒருவர் விட்ட சாபம் கூட நம்மை எளிதில் அண்டாது. இது ஆண்,பெண் இருவருக்கும் பொருந்தும், பெண்கள் காலில் தண்டை அல்லது கொலுசு அணிவதால் மாந்திரிக சக்தியினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கலாம். இதனால்தான் அக்காலத்தில் ஒரு காலிலாவது வசதிக்கேற்றவாறு தண்டை அணியும் பழக்கம் இருந்தது.

நமது விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம்,இருதய நோய், வயிற்றுக் கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும். நடு விரல் என்று சொல்லப்படும் பாம்பு விரல் உங்களை பற்றி குறிப்பதால்,நடு விரலில் மோதிரம் அணிந்தால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நீங்களாகவே தடைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் என்று பொருள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *