இனி சீமான் கரும்பு விவசாயி சின்னத்தை பயன்படுத்த முடியுமா ? கைவிட்டு போன சின்னம்!
2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டது. கடலூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தோல்வியை தழுவினாலும் கணிசமான அளவு வாக்குகளை பெற்றது.
2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் அடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சிக்கே கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகளுக்கு அதற்காக தயாராகி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் விவசாயி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டு வந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளதால் அந்த சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் வந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சின்னமாக அடையாளமாகியுள்ள கரும்பு விவசாயி சின்னத்தைப் பெறக் கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.