திமுக அரசே இப்படி செய்யலாமா? இது ஊழலுக்கு வழிவகுக்கும்.. ஆளுங்கட்சியை விளாசும் ஓபிஎஸ்..!

அரசாங்கமே எடை குறைவாக நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை அனுப்புவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- பொது விநியோகத் திட்டத்தின்மூலம் தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதிலும், நுகர்வோருக்குத் தேவையான பொருட்கள் சரியான அளவில், நியாயமான விலையில், தரமானதாகக் கிடைப்பதை உறுதி செய்வதிலும், நுகர்வோரின் குறைகளைக் களைவதிலும் மாநில அரசின் பங்கு மிக முக்கியமானதாகும்.

குறிப்பாக, இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் இருந்து நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் கணினிமயம் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலை கடைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவை 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக அனுப்பப்படுகின்றன என்றும், ஒவ்வொரு மூட்டையிலும் 4 முதல் 5 கிலோ வரை எடை குறைவாக உள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களே அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், எடைக் குறைவாக அனுப்பப்படும் மூட்டைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அரசே இதுபோன்று எடை குறைவாக பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பினால், அந்த எடைக் குறைவினை சரி செய்ய பொதுமக்களுக்கு குறைவான எடையில் பொருட்களை வழங்கும் சூழ்நிலை நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும். அரசாங்கமே எடை குறைவாக நியாய விலைக் கடைகளுக்கு பொருட்களை அனுப்புவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.

முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளிலிருந்து நியாய விலை கடைகளுக்கு உரிய அளவில் உரிய பொருட்கள் சென்றடையவும், நியாய விலைக் கடைகளிலிருந்து மக்களுக்கு உரிய அளவில் உரிய பொருட்கள் சென்றடையவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *