சென்னைக்கு அருகில் ஒரு பறவைகள் சரணாலயம் ஒன்று உள்ளது என்றால் நம்ப முடிகிறதா ?
திருவள்ளுர் அருகே இயற்கையாக அமைந்துள்ள ஏரி தான் பழவேற்காடு ஏரி. இந்த பழவேற்காடு பறவைகளின் சரணாலயமாகவும் உள்ளது. கடற்கரைக்கு அருகிலுள்ள மிகப் பெரிய உப்பு நீர் ஏரி எது என்றால் அதுதான் பழவேற்காடு ஏரி.
அந்த காலத்தில் திருப்பாலைவனம் என்ற பெயரில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இந்த இடத்தை துறைமுகமாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் முதல் பெரிய ஏரி ஒரிசாவில் உள்ள சிலிகா ஏரி, அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய கழிமுக உப்புநீர் ஏரி என்றால் அது பழவேற்காடு தான்.
ஶ்ரீஹரிகோட்டாவுக்குச் செல்லும் வழியில் பூநாரைகளை அதிக அளவில் பார்க்கலாம். அதற்கு அடுத்தபடியாக பூநாரைகளுக்கு உகந்த இடம் என்றால் அது பழவேற்காடுதான். இந்த வகை நாரைகளின் தாயகம் குஜராத் என்றும், இந்த வகை நாரைகளை ஜனவரி மாதத்தில் பழவேற்காடு ஏரியில் அதிகம் காணலாம் என்றும் பழவேற்காடு மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை நாரைகளின் உடல் அமைப்பு மற்ற நீர்ப்பறவைகளைப் போல் கால்கள் நீளமானது, ஆனால் சற்று வித்தியாசமாக இருக்கும். அதேநேரம் கழுத்தும் கால் போன்று நீளமாக இருக்கும். உடல் ரோஸ் நிற இறக்கைகளாலும் பல அம்சங்களை உடையதாகவும் இருக்கும். பூநாரைகள் சகதியில் பானை வடிவில் கூடமைத்து முட்டையிடும். பூநாரையை பற்றி பேசும் போது பூநாரை திருவிழாதான் நியாபகத்திற்கு வருகிறது. பூநாரைகளின் வருகையை ஆந்திர வனத்துறை பூநாரைத் திருவிழா என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடுகிறது.
1980 களில் இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதாம். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு 160 க்கும் மேற்ப்பட்ட பறவைகள் வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பழவேற்காடு ஏரிக்கு புலிகாடு என்று பெயரும் உள்ளதாம்.அது ஆங்கி லேயர் காலத்தில் பக்கிங்ஹாம் கால்வாயின் தொடர்ச்சியாக நீர்வழிப் பாதையாக பயன்படுத்தப்பட்டது பழவேற்காடு ஏரி. பின்னர் ஆங்கிலேயர்கள் வாயில் பழவேற்காடு என்ற பெயர் நுழையாததால், இவை புலிகாட் என்று ஆகிவிட்டதாம்.
இந்த ஏரியில் கலக்கும் ஆறுகள் சேற்று நண்டுகளை கொண்டு வருகின்றன. 1500 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருந்த பழவேற்காடு ஏரி வண்டல் படிவதால் 350 சதுர கி.மீ. ஆகச் சுருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. நவம்பர், டிசம்பரில் வண்டல் படிவதால் வலசை வரும் பறவைகளுக்கு உணவாகும் மீன், நீரடி பல்லுயிரியம் அமிழ்ந்துவிடுகிறது. இதனால் இங்கு வரும் பறவைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.