மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? கூடுமா? பதில் இதோ!
தற்போதைய சூழலில் மக்கள் எதை சாப்பிட்டாலும் மிகவும் யோசித்து ஹெல்தியாக இருந்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். காரணம், அனைவர் மத்தியிலும் உடல் எடை அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த தெளிவும் வந்துவிட்டது. பல ஆயிரம் செலவு செய்து, மருத்துவமனைக்கு செல்வதை விட, இப்போதே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் கண்டிப்பாக வாழ்க்கை நன்றாக இருக்கும் என பலர் நினைக்கின்றனர். இப்படி நினைக்கும் சிலர், உடல் எடை ஏறி விடுமோ என்ற பயத்தில் மாம்பழத்தை மொத்தமாக தங்களின் உணவு பட்டியலில் இருந்து விலக்கி விட்டுவிடுகின்றனர். மாம்பழம் சாப்பிடுவதால் உண்மையாகவே உடல் எடை அதிகரிக்குமா? இதோ பார்ப்போம்.
மாம்பழம், உடல் எடையை அதிகரிக்குமா? குறைக்குமா?
மாம்பழம், சுவைப்பதற்கு மட்டுமல்ல உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் நிறைந்த பழங்களாகவும் இருக்கின்றன. நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சத்துகள் மாம்பழத்தில் உள்ளன. உதாரணத்திற்கு, மாம்பழம் உடல் எடையை குறைக்கவும் உதவும் என மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். மாம்பழம், உடல் எடையை அதிகரிக்கும் என கூறுவது கட்டுக்கதை என்றும் பல மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மாம்பழத்தில் ஃபைபர் சத்துகள் அதிகமாக உள்ளன. இதனால், இவற்றை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால், பசி உணர்வு குறையும். இதனால் அதிக அளவு சாப்பிடுவதையும், அதனால் உடலில் கொழுப்பு தங்குவதையும் குறைக்கலாம். அது மட்டுமன்றி, மாம்பழத்தில் இயற்கையான சர்க்கரை சுவை இருக்கிறது.
உடல் எடையை குறைக்க மாம்பழத்தை உணவில் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?
பகுதிகளாக பிரித்து சாப்பிடுவது:
மாம்பழம் மட்டுமல்ல, எந்த உணவாக இருந்தாலும் அதை அளவுடன் சாப்பிடுமாறு பார்த்துக்கொள்ளவும். குறைந்த அளவில் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
சமச்சீர் உணவு:
முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் காய்கறிகளை மாம்பழத்துடன் சேர்த்து உணவில் சாப்பிடவும். இதனால் தேவையான கலோரிகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். மீதமுள்ள அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேறிவிடும்.
பிற உணவுகளை சாப்பிடும் போது கவனம் தேவை:
பிற உணவுகள் அல்லது சிற்றுண்டிகளை சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம் ஆகும். உங்களின் அன்றைய கலோரி தேவையை நீங்கள் எடுத்துக்கொண்ட பின்பு, மாம்பழம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். மேலும், மற்ற உயர் கலோரி உணவுகளை, குறிப்பாக பேக் செய்யப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்கவும்.
ஆரோக்கியமான மாம்பழ சமையல்களை செய்யவும்:
மாம்பழங்களின் சுவையை உயர்த்தவும், உடலுக்கு ஆரோக்கியம் பயக்கவும் பல்வேறு சமையல்களை செய்து பார்க்கவும். அந்த சமையல்கள், உங்கள் சுவைக்கு உகந்ததாகவும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையிலும் இருந்தால் நலம். மாம்பழத்தை விதவிதமான பழங்கள், நட்ஸ், தானியங்கள் உள்ளிட்டவற்றுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
பகல் பொழுதில் சாப்பிடவும்:
மாம்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்போதுதான், உங்கள் உடல் நீங்கள் சாப்பிட்ட மாம்பழத்தை சீக்கிரத்தில் ஜீரணமாக்க உதவும். மருத்துவர்கள், மதியம் 12 மணி முதல் 4 மணி வரை மாம்பழம் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் என்கின்றனர்.