பேரழிவுக்குள்ளான நாட்டிற்கு ஆதரவுக்கரம் நீட்டும் கனடா! ஜஸ்டின் ட்ரூடோவின் அறிவிப்பு
சிலி நாட்டிற்கு உதவும் வகையில் வனப்பகுதி தீயணைப்பு கருவிகளை அனுப்புவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
131 பேர் பலி
தென் அமெரிக்க நாடான சிலியில் பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு போராடி வருகிறது.
இந்த தீயினால் 1,100 வீடுகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
சிலியின் வரலாற்றில் மிகக் கொடிய தீவிபத்தாக இது கூறப்படுகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயும் போராடும் சிலிக்கு உதவுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.
ட்ரூடோ பதிவு
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘கடந்த ஆண்டு கனடா முழுவதும் காட்டுத் தீ பற்றி எரிந்தபோது, விலைமதிப்பற்ற ஆதரவை வழங்க சிலி முன் வந்தது.
இப்போது எங்கள் சிலி நண்பர்களை பாதிக்கும் பேரழிவுகரமான காட்டுத் தீக்கு பதிலளிக்கும் விதமாக, தீயணைப்பு நிபுணர்கள் மற்றும் வனப்பகுதி தீயணைப்பு கருவிகள் உட்பட அவர்களுக்கு உதவிகளை அனுப்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.