கேன்சர் மருத்துவ காப்பீடு: பாலிசி எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை..!

மருத்துவ காப்பீடு என்பது அத்தியாவசியம் ஆகிவிட்டது. மருத்துவ காப்பீடு திட்டங்களை பொறுத்தவரை குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு காத்திருப்பு காலம் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

அப்படி புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்டங்களை எப்படி தேர்வு செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு: அண்மை காலமாக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இதில் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிபவர்களுக்கு பல்வேறு சிகிச்சை வாய்ப்புகள் உள்ளன. அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் என நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது ஒரு நாளில் முடிந்து போவது அல்ல, தொடர்ந்து பல நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டி இருக்கும். எனவே இதற்கு உதவக்கூடிய வகையில் நம்மிடம் மருத்துவ காப்பீடு இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

கவரேஜ் மற்றும் பலன்கள்: புற்றுநோய் மருத்துவ காப்பீடு திட்டத்தை தேர்வு செய்யும் போது, எந்தெந்த வகை புற்றுநோய்கள், என்னென்ன நிலைகள் மற்றும் என்னென்ன வகை சிகிச்சைகள் கவராகின்றன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகள், ஸ்கேன் மற்றும் ஃபாலோ -அப் ஆகிய காப்பீட்டு பலன்கள் இடம்பெற்றுள்ளதாக என கேட்டு கொள்ளுங்கள். சில மருத்துவ காப்பீடுகளில் ரோபோடிக் சிகிச்சைகளுக்கு கூட காப்பீடு கிடைக்கும் எனவே அவற்றையெல்லாம் கவனிப்பது நல்லது.

காத்திருப்பு காலம்: பொதுவாக மருத்துவ காப்பீடு திட்டங்களில் குறிப்பிட்ட வகை நோய்களுக்கு காத்திருப்பு காலம் வைத்திருப்பர். பாலிசி எடுத்து ஒரு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை என குறிப்பிட்ட காலம் முடிந்த பின்னரே காப்பீடு கிடைக்கும் என ஒரு பட்டியலே இருக்கிறது. எனவே புற்றுநோய் சிகிச்சை தொடர்பான இந்த காத்திருப்பு காலத்தை கேட்டு புரிந்த பின்னர் பாலிசி எடுப்பது நல்லது.

எதற்கெல்லாம் காப்பீடு கிடைக்கும்?: புற்றுநோயை பொறுத்தவரை பாதிக்கப்பட்டவரின் வயது, நிலை மற்றும் நோயின் தன்மையை பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். எனவே பெரும்பாலான சிகிச்சை முறைகள் , சோதனைகள் மற்றும் பிற செலவினங்களை உள்ளட்டகிய காப்பீட்டை தேர்வு செய்து நன்மை அளிக்கும்.

உகந்த ப்ரீமியத்தை தேர்வு செய்யவும்: மருத்துவ காப்பீட்டின் ப்ரீமியமானது உங்களது பட்ஜெட்டிற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வயது, உடல் ஆரோக்கியம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்னைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பல்வேறு காப்பீடு திட்டங்கள் மற்றும் அதில் கிடைக்கும் பலன்கள் ஆகிகவற்றை ஒப்பிட்டு பாலிசியை தேர்வு செய்யவும்.

நிறுவனத்தை தேர்வு செய்வதில் கவனம்: பொதுவாகவே மருத்துவ காப்பீடு திட்டம் எடுக்கும் போது நீங்கள் காப்பீடு பெறும் நிறுவனம் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஏற்கக் கூடிய நிறுவனமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். புற்றுநோய் என வரும் போது பெரிய மருத்துவமனைகள், புற்றுநோய் மையங்கள் ஏற்கும் நிறுவனங்களின் காப்பீடாக, பெரும்பாலும் கேஷ் லெஸ் முறையில் செல்ல ஏதுவாக இருப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பொருத்தமான மருத்துவ காப்பீடு திட்டத்தை தேர்வு செய்வது, ஆண்டுதோறும் முறையாக ப்ரீமியம் செலுத்துவது ஆகியவை , உடல்நலம் குன்றிய காலத்தில் உங்களுக்கு நிதி ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தாது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *