Cancer: கணைய புற்றுநோய்: காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
பொதுவாக செரிமான நொதிகளை உற்பத்தி செய்யும் மற்றும் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கியமான உறுப்பு, கணையம் ஆகும். சமீப காலங்களில் கணைய புற்றுநோயின் தாக்கம் ஒருவர் கற்பனை செய்வதை விட அதிகமாக உள்ளது. அதன் அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பதும், இந்த புற்றுநோயை நிர்வகிக்க தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ சிகிச்சையினைப் பெறுவதும் அவசியம். கணைய புற்றுநோய் கணையத்தின் உயிரணுக்களில் ஏற்படுகிறது.
கணைய புற்றுநோய்க்கான காரணங்கள்:
மும்பையில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் டொனால்ட் ஜான் பாபு அளித்த பேட்டியில், “கணைய உயிரணுக்களில் மாற்றங்கள் இருக்கும்போது இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. இது கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து வீரியம் மிக்க புற்றுநோயாக மாறலாம்.
கணைய புற்றுநோயில் இரண்டு வகைப்பாடுகள் உள்ளன: நியூரோஎண்டோகிரைன் கட்டிகளை விட எக்ஸோகிரைன் கட்டிகள் அதிகம் காணப்படுகின்றன.
விரிவான ஆராய்ச்சி இருந்தபோதிலும், கணைய புற்றுநோயின் சரியான தோற்றம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு ஆய்வுகளின்படி, இந்த புற்றுநோய்க்கு மரபணு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
புகைப்பிடித்தல், நீரிழிவு நோய், நாள்பட்ட கணைய அழற்சி, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் அறிகுறிகளாகவுள்ளன. மேலும், உடல் பருமன் அதிகமுள்ளோர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு இக்கணையப் புற்றுநோய் எளிதில் வருகிறது.
அறிகுறிகள்:
கணையப் புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலான மக்களுக்கு எளிதில் கண்டறியமுடிவதில்லை. அதனால்தான் இந்த நோய் பெரும்பாலும் அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்படாமல் உள்ளது.
இந்த புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும்போது, முதுகில் பரவக்கூடிய அடிவயிற்றில் வலி, மஞ்சள் காமாலையைக் குறிக்கும் வகையிலான தோல் மாற்றம், கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், பொதுவான சோர்வு, பசியின்மை, வாந்தி மற்றும் குமட்டல், எடை இழப்பு, தோலில் அரிப்பு, கருமை நிற சிறுநீர், ஏற்கனவே இருக்கும் நீரிழிவு நோய் மோசமடைதல் போன்ற சில அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கத் தொடங்கலாம். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.
சிகிச்சை:
மேலும், இந்தப் புற்றுநோயை உறுதிப்படுத்திய பின்னர் சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டைப் பெறுவது அவசியம் என்று வலியுறுத்திய டாக்டர் டொனால்ட் ஜான் பாபு, “கணையத்தின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது, டிஸ்டல் கணைய அறுவை சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை ஒழிப்பதற்கான அதிவேக ஆற்றலைக் குறிக்கிறது. அதே நேரத்தில் கீமோதெரபி புற்றுநோய் செல்களைக் கொல்ல மருந்துகளைப் பயன்படுத்துகிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும், சீரான உணவு மற்றும் சீரான உடல் செயல்பாடு மூலம் உங்கள் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் செய்தால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம். உங்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை திறம்பட நிர்வகிக்க நீரிழிவு நோய்க்கு எதிரான தடுப்பு உத்திகளை செயல்படுத்துங்கள். மருத்துவ நிபுணர் பரிந்துரைத்தபடி அவ்வப்போது வீட்டிலேயே ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க குளுக்கோமீட்டரைப் பயன்படுத்துங்கள். இந்த தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது கணைய புற்றுநோயைத் தடுக்க உதவும்’’ என அவர் தெரிவிக்கிறார்.