“ஷாமர் ஜோசப்பை சேர்க்கவும் முடியல.. விலக்கவும் முடியல.. பெரிய தலைவலி” வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் புதிய சூப்பர் ஸ்டார் ஆக 24 வயது வலது கை வேகப் பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப் உருவாகி இருக்கிறார்.
அவரது அதிரடி பந்துவீச்சின் காரணமாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு, இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை அந்த அணிக்காக வென்ற டேரன் சமி புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார்.
தற்பொழுது தங்களது நாட்டில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்வதை இலக்காக வைத்து, இவரது பயிற்சியின் கீழ் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணி மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு விளையாடி வருகிறது.
இந்த நிலையில் தங்களுடைய திட்டத்தில் ஷாமர் ஜோசப் புதிய தலைவலியை உண்டாக்கி இருப்பதாக புகழ்ந்து பேசி இருக்கிறார். 68 ரன்களுக்கு 7 விக்கெட் என்கின்ற அற்புதமான பந்துவீச்சின் மூலம் அசத்திய அவரை, வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்குள் கொண்டு வர தன்னால் காத்திருக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். அதே சமயத்தில் தற்பொழுது தேர்வு செய்ய முடியாத சூழல் பற்றியும் பேசி இருக்கிறார்.